5648.

     மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
          மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
     எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
          வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி நடுவே
     பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
          பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
     நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
          நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.

உரை:

     தோழி! மண் ஆகிய முதல் பூதத்தின் முதற் சத்தி அதன் நுண்ணிய அணுவிற்குள் அணுவாய் எண்ணப்படுகின்ற அதற்கு உள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய் இவ்வாறே எண்ணப்படுகின்ற பூத அணுவுக்குள் ஒளிக்குள் ஒளியாய் இவ்வொளிகள் அனைத்தும் பரந்து விளங்குகின்ற வெளியாய் அவ்வெளிக்குள் வெளியாய் அமைந்த வெளியின் நடுவே பூத நடம் புரியும் சிவனுடைய திருவடிப் பெருமையை யாவராலும் பகுத்துணர முடியாது என்று பெரியோர்கள் சொல்வாராயின் அத்தகைய திருவடியை என் தலைமேல் அன்பு மிக வைத்தருளுகின்ற நடராசப் பெருமானுடைய நல்ல செயல் வல்லமையை யாவரே சொல்ல முடியும். எ.று.

     நிலம் நீர் முதலிய ஐவகைப் பூதங்களுக்கும் முதற் பூதம் என்பது தோன்ற, “மண் பூத முதல்” என்று கூறுகின்றாள். அப்பூதத்திற்கு முதலாகிய அருட் சத்தியை “முதற் சத்தி” என்று மொழிகின்றாள். அச்சத்தி பூத அணுவில் அணுவாய் இருந்து ஒளியாயும் அவ்வொளிக்குள் ஒளியாய் இலங்குவது பற்றி, “எண் பூதத்து அவ்வொளிக்குள் இலங்கு வெளியாய்” என்று மொழிகின்றாள். வெளிக்குள் வெளியாய் இருப்பது ஒரு பெரிய வெளி என்றும், அவ்வெளி நடுவே நின்று பூத அணுக்கள் இயங்குவதற்கு ஏதுவாகச் சிவபெருமான் நடம் புரிகின்றார் என்பது தோன்ற, “வெளி நடுவே பண் பூத நடம் புரியும் பதப்பெருமை” என்று பகர்கின்றாள். பாத மலரைத் தலைமேல் வைத்தவுடன் அன்புஊறிப் பெருகுவது பற்றி, “நண்பூற வைத்தருளும் நடராசப் பெருமான்” என்று மொழிகின்றாள். இதனால், மண் முதலிய பூத அணுக்களின் அணுவில் அணுவாய் ஒளியாய் ஒளிக்குள் ஒளியாய் ஒளி திகழும் வெளியாய் அல்வெளி நடு சிதாகாசமாய் எனவும் அங்கே சிவனுடைய திருநடனம் நிகழ்கிறது எனவும் கூறியவாறாம்.

     (24)