5649.

     வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை
          வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகாரணமாம்
     விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக
          விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான
     எண்குணமா சத்திஇந்தச் சத்திதனக் குள்ளே
          இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும்
     தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல்
          சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி.

உரை:

     தோழி! சத்தியும் அணுவும் சேர உளதாகின்ற கலப்பின்கண் சத்தியாகிய கூறினுள் ஒருமுகமாக விளங்குகின்ற ஒளி தரும் மாசத்தி அதனுள் அடங்கும் ஒரு காரணமாகும்; அதனுள் ஆகாச கரணமாகிய சத்தி அதனுள் தலைமையுற்று விளங்கும்; அதனைக் குருச்சத்தி என்பதுமுண்டு; அதற்கு மெய்ம்மை வடிவு தருவது எண்குணங்களைத் தன்னுள் கொண்ட சத்தியின் கூறு மாசத்தியாகும்; அந்தச் சத்திக்குள்ளே இறைவன் அதுவதுவாய் விளங்கி நடம் புரிகின்றான்; அக்காலத்து அவன் கொள்ளும் அருளுருவின் திருவடிப் பெருமை எவராலும் அறிய முடியாது என்று அறிஞர் கூறுவராயின் அவருடைய திருமேனியின் சிறப்பை எங்ஙனம் சொல்லுவது. எ.று.

     சத்தியும் அணுவும் ஒன்றாய்க் கலப்பதை, “வண்கலப்பு” என்று சிறப்பிக்கின்றாள். அச்சத்தியின் கரணக் கூறாக இருக்கும் மாசத்தி ஒளிமயமானது என்பாளாய், “வயங்கொளி மாசத்தி” என்று இயம்புகின்றாள். அம்மாசத்திக்குத் துணையாக இருப்பது விண்கரண சத்தி எனப்பட்டு அம்மாசத்திக்குத் தலைமைச் சத்தியாய் பெருமையால் குருச்சத்தியாய் மெய்ம்மை வடிவு தருவதால், “எண்குண மாசத்தியாய் விளங்குவதாம்” என்பது கருத்து. இச்சத்திக்குள்ளே அதுவதுவாய் இயைந்து நின்று இறைவன் நடம் புரிகின்றான் என்றறிக. கரண சத்தி - கருவியாகும் சத்தி. குருச் சத்தி - பெரிய சத்தி. எண்குண மாசத்தி - இறைவனுடைய எண்குணங்களையும் தன்பால் கொண்ட சத்தி என்பதாம். ஆடல் புரிதற்கு மேற்கொள்ளும் கருணைத் திருவுருவம், “தன்கருணைத் திருவடி” என்று குறிக்கப்படுகின்றது. சாமி - தலைவன்.

     (25)