5650. பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம்
பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை
உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில்
துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில்
தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர்
அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி.
உரை: தோழி! மிகப் பெரியவை என்று சொல்லப்படுகின்ற ஐவகைப் பூதங்கள் யாவையும் மூலப்பகுதி என்று பேசப்படுகின்ற மாயையின் வியாபகத்தில் சிறு கூறுகளாம்; அவை ஒழிந்த பெரிய பகுதியும் அப்பகுதிக்கு முதலாகிய குடிலையும் அவற்றைத் தன்கண் கொண்ட சிவசத்தி முதலாக அமைந்த சத்திகளின் கூட்டம் எல்லாம் அம்பலத்தில் ஞான நடம் புரிகின்ற அருட்சோதி ஆண்டவனுடைய மலர்போன்ற திருவடியின்கண் உண்டாகின்ற சிறிய அசைவினால் தோன்றுகின்றன என்பதாயின் இவை யாவற்றுக்கும் அரும் பெரும் பொருளாக நடிக்கின்ற கூத்தப் பெருமானுடைய திருவருள் பெருமையை எடுத்துரைப்பது என்னளவில் அடங்குவதாகுமோ? எ.று.
நிலம் முதலிய ஐவகைப் பூதங்களையும் மிகப் பெரியவை என வழங்குவது பற்றி, “பெரிய எனப் புகல்கின்ற பூதவகை” என்று புகல்கின்றாள். பகுதி மூலப் பிரகிருதி எனப்படும். மாயை பூதங்களை நோக்க அது பெரியதாதலால் அதனை, “உரிய பெரும் பகுதி” என்று உரைக்கின்றாள். குடிலை - சுத்த மாயை. சத்தியோகம் - சத்திகளின் கூட்டம்; கலப்பு, எனினும் அமையும். துரிய நடம் - ஞான நடனம். இதனால், மூலப்பகுதி முதல் குடிலை அருட்சத்தி முதலிய சத்திகளின் கூட்டம் யாவும் இறைவன் திருவடி அசைவால் தோன்றுகின்றன என்பதாம். (26)
|