5651.

     பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே
          பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
     தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்
          தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
     மன்வண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற
          வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
     மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்
          மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.

உரை:

     தோழி! பொன்மை நிறத்தையுடைய நிலம் முதலிய பூதங்களின் தன்மையும் உண்மையும் அவற்றின் உள்ளேயும் புறத்தேயும் அமைந்த கருவிகள் விளக்கமாம்; அவற்றிடையே பொருந்திய வெண்மை செம்மை பசுமை கருமை ஆகியவற்றின் கலப்பாகும்; அத்தன்மையே தன்மையாய்த் தனித்து நின்று அதற்கு ஒப்பற்ற முதலாய் நிலைத்த அழகிய ஒளி உருவமும் உயிர்ப்பும் பொருந்த நுண்ணிய அணுக்கூட்டங்களை அமைத்து அவ்வகையிலேயே நிறுத்தி நடத்துகின்ற ஒளி பொருந்திய ஞானசபையில் ஆடுகின்ற திருவடியின் இயற்கை வண்ணமாம்; அதன் சிறப்பை யாரே எடுத்துரைப்பார்கள். எ.று.

     பூதங்கட்குரிய தன்மையும் உளதாம் இயல்பும் அவற்றின்கண் உள்ளும் புறமும் கருவின் விளக்கமாம்; அது காரணமாக அவற்றிடையே வெண்மை செம்மை முதலிய நிறக் கலப்புக்கள் உண்டாகின்றன என்பது கருத்து. பசுமையும் அக்கரு விளக்கமே என்பதற்கு, “தன் வண்ணப் பசுமை” என்று சாற்றுகின்றாள். நிறத்தின் தன்மை மாற்றறிதாய்த் தனித்து விளங்குவது என்பது புலப்பட, “தன்மையினில் தன்மையதாய்” என்று உரைக்கின்றாள். அந்நிறங்கட்கு ஒளியும் உருவும் உயிர்ப்பும் தோன்றுமாறு அணுக் கூட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பு. வால் அணு -நுண்ணிய அணு. ஞான சபை ஒளிமயம் என்பதற்கு, “மின் வண்ணத் திருச்சபை” என்று விளம்புகின்றாள்.

     (27)