5652. பொற்புடைய ஐங்கருவுக் காதாரக் கரணம்
புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக்
கற்புறும்ஓர் அறுபதினா யிரம்அவற்றுக் கடையா
றாயிரமாங் கவற்றுக்கோர் அறுநூறிங் கிவைக்கே
விற்பொலிவும் அறுபதுமற் றிவைக்காறிங் கிந்த
வியன்கரண சத்திகளை விரித்துவிளக் குவதாய்ச்
சிற்பரமாய் மணிமன்றில் திருநடனம் புரியும்
திருவடியின் பெருமைஎவர் செப்புவர்காண் தோழி.
உரை: தோழி! அழகிய ஐம்பூதங்களின் ஆதாரமாகிய கரண சத்திகள் சொல்லப்பட்ட அறுகோடியும் ஆறிலக்கமும் அறுபதினாயிரமும் ஆறாயிரமும் அறுநூரும் அறுபதும் ஆறுமாய் விரியும்; இவற்றிற்குரிய கரண சத்திகளை அவ்வக் கருவினும் விரித்து விளக்குவது ஞான மயமாய் அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானுடைய திருவடியாகும்; அதன் பெருமையை யாவரே எடுத்துரைப்பார்கள். எ.று.
பொற்பு - அழகு. நிலம் முதலிய பூதங்கள் ஐந்துக்கும் தனித் தனியே கரு உண்டெனப் பரிபாடல் என்னும் நூல் கூறுகின்றது. அக்கருவைத் தனித்தனி இயக்கி விரியப் பண்ணுவது சத்தியின் கூறாகிய கரண சத்தி பூதங்களை இயக்கும் கரண சத்தியை, “ஆதார கரணம்” என்று அறிவிக்கின்றாள். இச்சத்திகளின் விரிவை அறுகோடி என்றும் ஆறிலக்கம் என்றும் பிறவுமாக வள்ளற் பெருமான் உரைப்பதற்கு நூல் ஆதரவோ அனுபவமோ கிடைக்காமையால் அவற்றை இங்கே விளக்க இயலவில்லை. வில் - ஒளி. சிற்பரம் - மேலான ஞானம். கரண சத்திகளை விரித்து விளக்குதற்குச் சிவத்தின் திருவடி ஞானம் வேண்டும் என்பது விளங்க, “வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய்ச் சிற்பரமாய் மன்றில் நடம்புரியும் திருவடி”என்று வள்ளற் பெருமான் இதனால் நாம் உய்த்துணர உரைத்தருளுகின்றார். (28)
|