5653. ஏற்றமுறும் ஐங்கருவுக் கியல்பகுதிக் கரணம்
எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே
தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை
துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான்
ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம்
அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச்
சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும்
சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
உரை: தோழி! உயர்வுடைய ஐம்பூதக் கருவுகட்கு இயன்ற பிரகிருதி காரியமாகிய கரணங்கள் ஒவ்வொன்றுக்கும் முறையே ஏழு கோடியும் ஏழு இலக்கமும் எழுபதனாயிரமும் எழுநூறும் எழுபதும் ஏழுமாம்; இவை அனைத்தையும் தனித்தனியே தோற்றுவித்து நிலைபெறுவித்து வடிவும் வண்ணமும் சுவையும் பயனும் உண்டாக்குவது சிவமாகும்; அதன் திருவடிப் பெருமையை அறிந்து சொல்லுகின்றவர்கள் யாவர் உளர். எ.று.
பகுதிக் கரணம் மூலப் பகுதியிலிருந்து உளவாகும் கரணங்கள் என அறிக. கரணங்கள் இவற்றிற் கென்றே தோன்றியவை என்பதற்கு, “தோற்றமுறும்” என்று சொல்லுகின்றாள். எழுமை துன்னிய நூறு - எழுநூறு. கரு ஐந்துக்கும் முறையே கரணங்கள் ஏழுகோடி ஏழிலக்கம் எழுபதினாயிரம் எழுநூறு எழுபதும் எஞ்சிய ஏழும் கருவினிடத்து உளவாகும் தன் மாத்திரைகட்கு உரியவை. இவற்றைத் தோற்றுவித்துப் பயன் விளைவிப்பது சிவபெருமானாகிய சாமி என அறிக. இவற்றை விளங்கிக் கொள்வதற்குப் போதிய ஆதாரங்களோ அனுபவ நூல்களோ கிடைத்தில. (29)
|