5654. விளங்கியஐங் கருச்சத்தி ஓர் அனந்தங் கருவில்
விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம்
வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம்
மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித்
தளங்கொளஈண் டவ்வவற்றிங் குட்புறம்நின் றொளிரும்
சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
உரை: தோழி! மேலே கூறிய கரணங்களோடு கூடிய கருவின் கண் அடங்கி உள்ள சத்திகள் அளவிறந்தனவாகும்; அச்சத்திகளின் வாயிலாகக் கருவிடத்தே உண்டாகின்ற காரிய சத்திகள் அளவிறந்தனவாகும்; இவற்றை வளம் பெறுமாறு ஆக்கித் தருகின்ற சத்திகள் அளவிறந்தனவாகும்; அவற்றைத் தருவித்து மாண்புறுவிக்கும் சத்திகள் அளவிறந்தனவாகும்; அவற்றுள் ஒவ்வொன்றிலும் அதிட்டித்து நிற்கும் சத்திகள் அளவிறந்தனவாகும்; இவ்வாறு பெருகிய சத்திகளைத் தனித்தனியே இயக்கி இடங்கொண்டு அவற்றிற்கு உள்ளும் புறமும் நின்று ஒளிர்கின்ற சிவத்தின் திருவடிப் பெருமையை யாரே அறிந்து சொல்வார்; ஒருவரும் இல்லை. எ.று.
கருச்சத்தி வேறு, கருவில் விளைகின்ற சத்தி வேறு; அவற்றை வெளிப்படுக்கின்ற சத்திகள் வேறு; வெளிப்படுமாறு செய்கின்ற சத்திகள் வேறு; இவற்றின் இடமாக இருந்து அதிட்டிக்கும் சத்திகள் வேறு என அறிக. அதிட்டித்தல் - இடம் கொண்டு நிறைதல். தளம் கொளல் - இடம் பெறல். இச்சத்திகள் அனைத்திலும் நின்று இயக்கி உள்ளும் புறமும் நின்று திகழ்வது இறைவனது அருட்டிறம் என உணர்த்தியவாறாம். (30)
|