5655.

     காணுகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும்
          கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின்
     மாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில்
          மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்
     பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும்
          பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி
     ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும்
          எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி.

உரை:

     தோழி! பூதம் ஐந்தினிடத்தே காணப்படுகின்ற கருவினிடத்தே உள்ள வித்தும் அங்குரமும் ஆகிய இரண்டின் இயல்புகள் மிகப் பலவாகும்; அவற்றின் அடியும் நடுவும் முடிவுமாகிய பகுதிகளின் இயல்புகள் பலவாகும்; அப்பலவற்றில் பொருந்துவதாய் அவற்றின் சேர்க்கையுமாய்ப் பொருந்தி அவற்றைப் பற்றியும் பற்றாமலும் நடிக்கின்ற அழகிய அருள் உருவாய சிவத்தின் திருவடிப் பெருமையை யாவரே சொல்ல வல்லார். எ.று.

     பூதங்கட்கு மூலமாய் ஐங்கருவும் காணப்படுவதால், “காணுகின்ற ஐங்கரு” என்று அறிவிக்கின்றாள். அங்குரம் - முளை. முளைக்கு அடியும் நடுவும் முடியும் சிறப்புடையனவாதலின் அவற்றை, “மாணுகின்ற இயல்கள்” என இயம்புகின்றாள். முளையின் முடிப் பகுதி அதற்கு இனிது அமைதல் வேண்டி, “முடி இயல் முடியின் பூணும் இயல்” என்று மொழிகின்றாள். புணர்க்கை - சேர்க்கை. கருவில் அமைந்த வித்தும் அங்குரமும் அடி நடு முடி ஆகிய இயல்கள் மூன்றும் பொருந்திய சேர்க்கை சிவத்தின் செயலாதல் விளங்க, “தானாகி ஏணுகின்ற அவை” என்று எடுத்துரைக்கின்றாள்.

     (31)