5656. மண்முதலாம் தத்துவத்தின் தன்மைபல கோடி
வயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம்
பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை ஒரு கோடி
பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம்
எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம்
எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே
விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது
விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி.
உரை: தோழி! மண் முதலிய தத்துவத்தின் தன்மைகள் பல கோடியாகும்; அவற்றுள் விளங்குகின்ற சத்திகளின் கூட்டத்தால் உண்டாயின தன்மைகள் எண்ணிறந்தனவாகும்; அங்ஙனம் அமைந்த தன்மைகளில் திண்மையுடையன ஒரு கோடியாகும்; அத்திண்மையை உருவித்த சத்திகளின் கூட்டத்தால் சொல்லப்படும் திண்மைகள் அளவில்லனவாகும்; இங்ஙனம் எண்ணப்பட்ட திண்மைகளும் இவற்றின் விகற்பங்களும் எல்லாம் தனித்தனியாகி நின்று விளங்க நிலை கொண்டு யாவும் ஓர் அண்டம் என்னும்படி அவற்றோடு கலந்தும் கலவாமலும் கூத்தாடும் சிவனது திருவடிப் பெருமையை யாவரே விளம்புவார்கள். எ.று.
பலவாகிய சத்திகள் சேர்ந்த தொகுதியை, “வயங்கு சத்திக் கூட்டம்” எனத் தெரிவிக்கின்றாள். பண்ணுதல் - அமைதல். திண்மை - திண்ணிய ஒருமைப்பாடு. திண்ணியவை பயன் விளைவிக்கும் அனந்தமாகிய சத்திகளின் சேர்க்கையால் மெலிவுற்ற தன்மைகள் எண்ணிறந்தன என விளக்குவாளாய், “பலித்த சத்திக் கூட்டத்தால் பணித்தன ஓர் அனந்தம்” என்று கூறுகின்றாள். பணிந்தன என்றது பணித்தன என வந்தது. பணிதல் - மெலிதாதல். திண்மையும் மென்மையும், திண்மை மென்மையும், மென்மைத் திண்மையும் என விகற்பங்கள் பலவாதலால் “இவற்றினது விகற்பம் எல்லாமும்” என இசைக்கின்றாள். மண் முதலாகிய தத்துவங்கள் எல்லாம் அடங்கிய அண்டம் விண்ணிடத்தே ஒடுங்குவதால், “விண் என்னும்படி அவற்றில் கலந்து” என விளம்புகின்றாள். அவற்றோடு கலந்தும் கலவாமலும் ஆடல் புரிவது சிவத்தின் இயல்பு என்று தெரிவித்தவாறாம். (32)
|