5657. விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்
பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.
உரை: தோழி! மிகவும் மேலதாகிய பராகாசத்திலே முதலில் மூன்று பூக்கள் மலர அப் பூவினிடத்தே ஒரு பூ மலர அதன்கண் மற்றொரு பூ மலர இந்த ஐவகைப் பூக்களிடத்தே கணுவில் பிரிதொரு பூ மலர அதிலே வேறொரு பூ கட்டவிழ்ந்து மலர மேலும் வேறொரு பூ இதழ் விரிந்து மலர, இவ்வேழு பூவினுள் பெண்ணிடத்தே நான்கும், ஆணிடத்தே மூன்றுமாய்ப் பிரிவில்லாமலும் பிரிவுற்றும் உயர்ந்து உடலும் கருவி கரணங்களும் பொருந்த ஏற்றி அதன் நடுவே நின்று விளங்குவது சிவபரம்பொருளின் திருவடி; அதன் பெருமையை யாரே சொல்லுவர் எ.று.
இங்கே கூறிய ஏழு பூக்களையும் பிருதிவி அப்பூ, தேயு, வாயு, ஆகாசம், பிரகிருதி, ஆன்மா என்னும் ஏழு என்று உபதேசப் பகுதி கூறுகிறது. அவற்றுள் புருஷபாகம் மூன்றும் என்றும், பெண் பாகம் நான்கு என்றும் கூறுவர். இவற்றின் நடுவே சிவம் விளங்குகிறது என்பார், “நடு நின்று விளங்கும் நல்ல திருவடி” என்றும் நவில்கின்றார். இவ்வருட்பாட்டின் பொருள் விளக்கம் வேறு நூல்களால் அறிய முடியவில்லை; ஆதலால் உபதேசப் பகுதியில் விளங்கிய அளவில் உரை நிற்கின்றது. (33)
|