5658.

     வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல்
          மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள்
     நண்பூறும் சத்திபல சத்திகளுள் வயங்கும்
          நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில்
     பண்பாய நடங்கள்பல பலபெயர்ப்பும் காட்டும்
          பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில்
     கண்பாய இவற்றினொடு கலந்துகல வாமல்
          காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி.

உரை:

     தோழி! வளமான இப்பூக்களில் வடிவுகள் வண்ணங்கள் மதிக்கத்தக்க இயல்புகள் அவற்றிடத்தே விளங்கும் ஒளிகள் பலபலவாகும்; இவற்றுள் பொருந்திய சத்திகள் பலவும் அச்சத்திகளுள் நாதங்கள் பலவும் உள்ளன; அந்த நாதங்களின் நடுவில் ஒரு கலையில் பண்பு விரிந்த நடனங்கள் பலவாகும்; நடனத்தில் அடி பெயர்ந்து காட்டும் இடங்கள் பலவாகும்; இவ்விடங்கட் கெல்லாம் பதிப்பொருளாய் அம்பலத்தில் இடம் பெறக் கலந்தும் கலவாமலும் காணப்படுவது இறைவன் திருவடி; அதன் சிறப்பை யாவராலும் எடுத்துரைக்க முடியாது. எ.று.

     வடிவுகளும் வண்ணங்களும் இயல்புகளும் ஒளிகளும் பல நிறைந்ததுள்ளமையின், “வண்பூ” என்று சிறப்பிக்கின்றாள். சத்திகள் பலவும் அன்புடன் கூடி இருத்தலால், “நண்பூறும் சத்தி பல” என்று இயம்புகின்றாள். பலவாகிய சத்திகட்கு இடமாதலால் நாதங்களும் பலவாயின. கலை என்பது கிரியா சத்திகளின் கூடிய நிலையாகும். அக்கலை இடமாக இறைவனுடைய நடனங்கள் பலவும் நிகழ்கின்றன; நடனத்தின்போது அடிபெயர்ந்து காட்டும் பகுதிகள் பலவாதலால் அவற்றை, “பதிகள் பல” எனப் பகர்கின்றாள். இவைகள் யாவும் வடலூர் வள்ளலுடையை யோகாந்த ஞான அனுபவங்களாதலால் அவை இங்கே விளக்கப்படவில்லை.

     (34)