5659. ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை
உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத்
தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்
தண்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித்
தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து
திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி வெளியில்
பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை
பகுத்துரைக்க வல்லர்ஆர் பகராய்என் தோழி.
உரை: தோழி! உயர்ந்த ஐவகைப் பூக்களாகிய இவற்றுள் ஒன்றின் ஒன்று திண்மையுற்று அதுவதுவாய் இயைந்து பற்றுனவற்றைப் பற்றுமாறு தாங்குகின்ற மாசத்திகளின்பெரிய கூட்டம் கலையாம் தன்மையும் ஆங்காங்குத் தனித்தனி நின்று விளக்கமுற்றுத் தேங்குமிடத்துக் கலைத் தொகுதி விரிந்து செய்கைகள் பல செய்து ஒளியாயும் அவ்வொளி பரவும் அருள் வெளியாயும் கட்டற்ற அவ்வெளி நிலவும் பரவெளியில் நன்கமைய விளங்குகின்ற சிவத்தின் திருவடிப் பெருமையைப் பகுத்தாய்ந்து உரைக்க வல்லவர் யாவர் உளர்; நீயே சொல். எ.று.
திண்மையுற்றாலன்றிப் பற்றுவன பற்றலாகாமை விளங்க, “திண்மை யுற்றன மற்று அதுவதுவும் பற்றுவன பற்ற” என்றும், கலையாகிய சத்திகளின் கூட்டம் ஆங்காங்குத் தனித்தனி நின்று பின்னர்க் கலைவதால், அவைகள் செய்கைகள் பல புரிகின்றன என்றும் அறிக. அருள் வெளி அருட் சத்தியால் கட்டுறுதலால் கட்டற்ற பரவெளியை, “திறவில் ஒளி வெளி” என்று உரைக்கின்றாள். இருவும் - இப்பாட்டில் அடங்கிய பொருளும் வடலூர் வள்ளலின் யோகாந்த ஞானானுபவம் என்று தெளிக. (35)
|