5660. விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த
விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்
பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
தெரிந்திடுநா னிலைக்குள்ளே இருந்துவெளிப் படவும்
செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்
எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.
உரை: தோழி! ஐம்பூதங்களும் விரிதற்கு ஏதுவாகிய அவற்றில் கருவிலே விடைய சத்திகள் பலவேறு வகையில் இடம் பெற்று விளங்க அவை தாமும் பின்னர்ச் செயற்குரிய விகற்பங்களாகிப் பிரிந்திடும்; பின்னர் மூலப் பகுதியின் கூறுகள் பல கோடி விரியப் பிரியாது நிற்கின்ற பெருஞ்சத்திக் கூறுகள் பற்பல கோடியாய் விளக்கமுறும் நான்கு நிலைக்குள் இருந்து வெளிப்படும்; செயல்கள் பலவற்றைச் செய்கின்ற வலியுடையதாகிய தாரக சத்தி மேலோங்கி நிற்கும்; அதன் நடுவெளியில் சிவத்தின் திருவடி இருந்து விளக்கமுறும்; அதன் எல்லையை அளவிட்டுச் சொல்ல வல்லவர் யாவர் உளர்; ஒருவருமில்லை. எ.று.
பூதக் கரு ஐந்தினையும் விரிந்திடும் ஐங்கரு என்று உரைக்கின்றாள். இது முதலாக விடைய சத்தி, உருவ சத்தி, சொரூப சத்தி ஆகியவற்றை எடுத்தோதுகின்றாள். விடைய சத்திகள் ஐங்கருவில் எண்ணிறந்த வகையில் விரிந்து பலவேறு விகற்பங்களாகப் பிரியும் என்றும் பின்னர் மூலப்பகுதியின் பல கோடிக் கூறுகள் பெரிய சத்தியின் கூறுகளோடு மிகப் பலவாய் விரிந்து விளங்கும் என்றும், இவை யாவும் செய்யப்படும் செய்கைகளுக்கேற்ப நானிலைக்குள் இருந்து விளக்கமுறும் என்றும், அவற்றிற்கு மேல் தீயின் வடிவுடைய தாரக சத்தி என்னும் ஆதார சத்தி ஓங்கி விளங்கும் என்றும், அதன் நடுவே சிவம் விளங்கும் என்றும் கூறுகின்றார். விகித விகற்பம் - தனி விகற்பம். மான் - மூலப்பகுதி. இலக்கணங்கள் -கூறுகள். நானிலை - மேல், நடு, கீழ், பக்கம் என்ற நிலைகள். தாரகம் - ஆதாரம். (36)
|