5662. உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம்
உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாவெண் ணிலவே
நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள்
நேர்மை ஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே
குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து
குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே
மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை
வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
உரை: தோழி! தங்குகின்ற ஐவகைப் பூதக் கருவில் அமைந்த உருவ சத்தியின் விகற்பங்கள் நிலைப்பதற்கும் நினைந்து உணர்வதற்கும் இயலாதனவாகும்; வெண்மையான நிலவு ஒளி நிறைந்த அவை தனித்தனியே நின்று விளங்க அவற்றிற்குள் நேர்மையும் உண்மையும் எய்துவித்து அந்நேர்மை உண்மைகளின் அகத்தே குறைவில்லாத பலவேறு குணங்கள் பொருந்த அமைத்து அக் குணங்களுக்குள்ளே குறிகள் பலவற்றைக் கூட்டுவித்து அவ்விடத்து ஒடுங்கி இருந்து தெய்வ மணத்தை வெளிப்படுத்துகின்ற சிவத்தின் மலர் போலும் திருவடிப் பெருமையை வகை வகையாக உரைக்க வல்லவர் யாவர் காண்; உரைப்பாயாக. எ.று.
பூதங்களில் நீங்காது இருப்பது பற்றி, “உறைந்திடும் ஐங்கரு” என்று உரைக்கின்றாள். உருவ சத்தி உறைந்திடும் ஐங்கரு எனினும் பொருந்தும். விகற்பம் -வேறு வேறு வகைகள். உன்னுதல் - நிலைத்தல். உருவ சத்தியின் விகற்பங்கள் வெண்ணிலவின் ஒளி நிறைந்து தனித்தனியே விளங்குமாறு நேர்மையும் ஒண்மையும் அமைந்துள என்பதற்கு, “அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து” என்று கூறுகின்றாள். அகத்தே குறைவில்லாத பலவேறு குணங்களும் குறிகளும் எய்துவித்துள்ளான் இறைவன் என்பது புலப்பட, “பலவேறு குணங்கள் உறப் புரிந்து குணங்கள் உள்ளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்து” என விளக்குகின்றாள். குணங் குறிகளிடத்தே அமர்கின்ற பொழுது பரமனுடைய ஞான மணம் ஒடுங்கி இருத்தலால் அதனை அவனது திருவடிப் புறத்தே கமழச் செய்வதுபற்றி, “மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலரடி” என உரைத்து தலைவி மகிழ்கின்றாள். (38)
|