5663.

     சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம்
          சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே
     தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத்
          தகும் அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம்
     வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து
          மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி
     ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும்
          அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி.

உரை:

     தோழி! ஐந்தாகிய பூதக் கருவில் சொருப சத்திகளின் வகைகள் சூழ்ந்து நின்று வாக்கு மனங்களின் எல்லை கடந்துள்ளன; அவைகள் குறைவின்றித் தனித்தனியே நின்று விளங்க அவற்றிற்குள் நவநவமான விளக்கம் தந்து அவ்விளக்கங்கள் பலவும் நிலைபெறுமாறு சத்தி நிலை ஒன்று விளக்கமுறச் செய்து மதிப்புடைய அந்தச் சத்தியில் பெரிய சத்தராகி அமைந்து விளங்கும் பரம்பரமாகிய சிவத்தை அசைவித்து நின்று நடிக்கும் திருவடியின் பெருமையை எடுத்துரைப்பவர் யாவருமில்லை; அறிவாயாக. எ.று.

     பொருள்களுக்குச் சாமான்யம் விசேடம் என்ற சொருப பேதங்களை நல்குவது சொருப சத்தி என்பதாகும்; அது வாக்கு மனங்களின் எல்லைக்கு அப்பால் அமைந்தது என்பதுபற்றி, “சொல்லினொடு மனம் கடந்த எல்லை இலாதன” என இயம்புகின்றாள். அவை தனித்தனி நிற்குமிடத்துச் சத்தி பேதத்துக்குக் குறையில்லாமல் உள்ளனவாம் என்பதை, “தாழ்ந்திலவாய்” என்று சாற்றுகின்றாள். சத்தி பேதங்கள் தனித்தனிப் புதிய விளக்கங்கள் கொண்டு நிலைபெறுமாறு சத்தி நிலை ஒன்று அமைந்துள்ளது என்பாளாய், “நவ விளக்கம் வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுறப் புரிந்து” என்று சொல்லுகின்றாள். நவ விளக்கம் என்பது ஒன்பது வகை விளக்கம் என்று கருதுபவரும் உண்டு ஆயினும் உண்மை நிலை இனிது விளங்கவில்லை. சத்தி நிலையில் பரம்பொருளாகிய சிவம் சத்திமானாய் எழுந்தருளுகின்றது என்பதை, “சத்தி தனில் மன்னுசத்தராகி ஆழ்ந்திடும் ஓர் பரம்பரம்” என்று அறிவுறுத்துகின்றார். பரம்பொருளாகிய சிவத்தின் திருமேனியில் அதன் திருவடிகள் அசைதலால் அசைவு தோன்றுகிறது என அறிக.

     (39)