5664.

     பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை
          பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில்
     வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி
          வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி
     தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி
          சார்ந்திடுவள் அவள்அவத்தே தனிப்பரைசார்ந் திடுவள்
     திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும்
          திருவடியின் பெருவடிவைச் செப்புவதார் தோழி.

உரை:

     தோழி! பசுவைப் போன்ற பூதக் கரு ஐந்தனுள் சொல்லப் படுகின்ற சுவைத் தன்மை பற்பல கோடிகளாகும்; அவ்வுற்பவ சத்திகளில் பொன்னிறமுடைய பலவகைப்பட்ட நவசத்திகள் பல கோடியாகும்; அவற்றிற்குள் ஆதி சத்தி விளக்கமுறுவள்; அவள் தானே பத்து வகை இயல்புடையவாய்த் தனித்தனி ஓங்காரியாக வந்தடைவள்; அவளிடத்தே தனிப்பட்ட பராசத்தி வந்து பொருந்துவள்; அப்பரையின் நடுவில் நின்று நடம் புரியும் சிவத்தின் திருவடிப் பெருமையை ஒருவராலும் சொல்லவொண்ணாது காண். எ.று.

     நிறம் - ஈண்டு இயல்பு குறித்து நின்றது. சுவைத் தன்மையை உண்டு பண்ணுவது உற்பவ சத்தி என உணர்க. விவித சத்தி - விதவிதமான சத்திகள். அவை பொன்னிறம் உடையவை என்றற்கு, “வசு நிறத்த விவித நவசக்தி” என்று விளம்புகின்றாள். நவசத்திகள் இன்னவை என விளங்கவில்லை. ஆதி - ஆதிசக்தி. அதனைத் தாரக சத்தி என்றும் சொல்லலாம். அது பத்து வகை இயல்புடன் தனி நின்று ஓங்காரி எனப்படும். அப் பரையின் நடுவிலே இறைவன் திருநடம் புரிவன் என்பது கருத்து. எண்வகைத் திக்குகளும் தன்கண் அடங்க நிலவுவதாகலின் பராசத்தியின் நடுவகம், “திசை நிறத்தப் பரை நடு” என்று சொல்லப்படுகின்றது. அப்பரை நடுவில் திகழ்கின்ற சிவத்தின் திருவடிப் பெருமையை யாவராலும் சொல்ல ஒண்ணாது எனத் தலைவி தோழிக்குச் சொல்லுகின்றாள் என்பது கருத்து.

     (40)