5665.

     பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே
          பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து
     மாத்தகைய பெருஞ்சோதி மணிமன்றும் விளங்கும்
          வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள்
     ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி
          இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன்
     தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில்
          துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி.

உரை:

     தோழி! பூதக் கருவினிடத்தே தோன்றிய ஒளி பொருந்திய பூக்களின் அகத்திலும் புறத்திலும் பக்கத்திலும் பூத்துக் காய்த்து மதிக்கின்ற அமுது ஒழுகும்படியாகப் பழுத்துப் பெருமை பொருந்திய பெரிய ஒளி திகழும் அழகிய அம்பலத்தில் விளங்குகின்ற சிவத்தின் இயல்பை ஒருசிறிதும் அறிய வியலாமல் வேதங்கள் துதிப்பதும், உயர்வதும் தாழ்வதுமாகிய இருக்கின்றன என்று ஞானிகள் சொல்லுவாராயின், சிறியவளாகிய நான் தோத்திரம் செய்து திருவடிகளைக் கண்டு தரிசித்து மகிழுமாறு அம்பலத்தில் விளங்குகின்ற அத்திருவடிகளின் பெருமையை யாதொன்று சொல்லுவேன். எ.று.

     சுடர்ப் பூவாகப் பூத்துக் காய்த்து அமுதொழுகப் பழுத்து விளங்குவது மன்றுள் விளங்கும் சிவம் என்பது புலப்பட, “மதி அமுது ஒழுகப் பழுத்து மன்றுள் விளங்கும் மாத்தகைய பெருஞ் சோதி” என்று விளக்குகின்றாள். அப்பெருஞ் சோதியின் இயல்பை அறிய மாட்டாமல் வேதங்கள் ஏத்தித் தடுமாறுகின்றன என்பாளாய், “ஒரு சிறிதும் அறிய மாட்டாமல் மறைகள் ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதுமாகி இருக்கின்ற” என இயம்புகின்றாள். இருக்கின்றன எனற்பாலது அன்சாரியைக் கெட்டு இருக்கின்ற என வந்தது. வேதங்கள் கண்டு பரவுவதற்குத் தடுமாறுகின்ற திருவடியின் பெருமையைச் சிறியவளாகிய யான் எடுத்துரைக்க முடியாது என்பது கருத்து.

     (41)