5666. வளம்பெறுவிண் அணுக்குள்ஒரு மதிஇரவி அழலாய்
வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும்
தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித்
தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய்
உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும்
ஒருதலைவன் சேவடிச்சீர் உரைப்பவர்எவ் வுலகில்
அளந்தறிதும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய
அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி.
உரை: தோழி! வளமிக்க விண்ணாகிய பூதத்தின் அணுவுக்குள் சந்திரன் சூரியன் நெருப்பாகவும் வேறாக விளங்குகின்ற நட்சத்திரங்களாகவும் இவ்வாறே விண்மீன் வகைகள் அனைத்தையும் தோற்றுவிக்கும் இடமாய் ஞான விளக்கமாய்ப் பராசத்தி மயமாகிப் பின்னர் அச் சத்தியை உடைய ஒப்பற்ற சத்திமானாகிப் பின்னர்த் தத்துவங்கள் எல்லாவற்றையும் கடந்து பத்தி செய்யும் அன்பர்களின் மனத்தின்கண் புகுந்தருளுதற்கு அழகிய அம்பலத்தில் திருக்கூத்தாடும் ஒப்பற்ற தலைவனாகிய சிவனுடைய சேவடியின் சிறப்புக்களை எடுத்துரைப்பவர் யாவர் எவ்வுலகில் உளர் என்று ஆராய்ந்து அறிவோம் என வேதங்கள் முறையிடுகின்றன என்றால் சிறிய அடிமையாகிய யான் எடுத்துரைக்க இயலுமோ? இயலாது என அறிவாயாக. எ.று.
சிவ பரம்பொருள் விண் அணுவுக்குள் சந்திர சூரிய அக்கினிகளைத் தோற்றுவிப்பதும் அவற்றிற்கு வேறாகிய நட்சத்திரங்கள் கிரகங்கள் அனைத்தையும் தோற்றுவிப்பதுமாகிய இடமாய் ஞான ஒளி பொருந்திய பராசத்தி மயமாகிறது என்றும், பின்னர் அதுவே அச் சத்தியையுடைய சத்திமானாகிறது என்றும், பின்னர்த் தத்துவ வகைகள் எல்லாவற்றையும் கடந்து அன்பர்களின் மனத்துக்குள் எழுந்தருளும் பொருட்டு மணி மன்றில் நடம் புரிகின்றார் என்றும் இதனால் விளங்க உரைத்தவாறாம் என அறிக. (42)
|