5667.

     பரவிய ஐங்கருவினிலே பருவசத்தி வயத்தே
          பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே
     விரவியதத் துவஅணுக்கள் ஒன்றொடொன் றாய்ஒன்றி
          விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய்
     உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே
          ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும்
     தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய
          தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி.

உரை:

     தோழி! பரந்த ஐவகைப் பூதங்களின் கருவில் ஒடுங்கியுள்ள பருவ சத்தியொடு கூடிப் பரையாகிய சிவசத்தி அதிட்டித்தலால் நாதமும் விந்துமாகிய சுத்த தத்துவங்கள் தம்மிற் கலந்து கொள்ளும் கலப்பின்கண் பொருந்திய ஏனைய தத்துவ அணுக்கள் ஒன்றோடொன்று சேர்ந்து ஒன்றி விளங்க அவற்றில் அடியிலும் நடுவிலும் ஈற்றிலும் மூவகைப் புருஷர்களாய் வலிய இயல்பைப் பெற்று உயிரை இயக்கி அதன் அறிவின்கண்ணே உண்மையறிவை விளங்க வைத்து ஓங்குகின்ற சீரிய அம்பலத்தில் ஒளி நடனம் புரிகின்ற உயர்ந்த இயல்பினை உடைய இச் சிவத்தின் தன்மையை யாரே தெரிந்துரைப்பார்கள்; அறிவால் சிறியவளாகிய யான் உரைக்கக் கூடிய தரமுடையதாகுமோ? ஆகாது நீயே சொல்லுக. எ.று.

     பருவ சத்தி - அவ்வப் பருவங்களைத் தோற்றுவிக்கும் சத்தி. பரை - சிவசத்தி. பரையாகிய சிவசத்தி பருவ சத்தி இடமாக அதிட்டித்து நிற்ப அந்நிலையில் நாத தத்துவமும் விந்து தத்துவமும் தம்மிற் கலந்து கொள்கின்றன; அக் கலப்பின்கண் சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை முதலிய தத்துவ அணுக்கள் ஒன்றோடொன்றாய்க் கூடி ஒரு தத்துவமாய் விளங்கும். அவற்றின் அடியில் உயிர் புருஷன் என்றும், நடுவில் மத்திய புருஷன் என்றும், ஈற்றில் தத் புருஷன் என்றும் முறையே மூவிதமாய் வலிய இயல்புகளைப் பொருந்தி உயிரை இயங்கச் செய்வது சிவம். அதற்குரிய உண்மையறிவை அறிவித்து அம்பலத்தில் ஞான நடம் புரிகின்றது. உயர்ந்த இயல்பினதாகிய இந்தச் சிவம் இதன் இயல்புகளை அறிந்துரைக்க வல்லவர் யாவர் உளர் என்பது கருத்து. இது யோகாந்த ஞானானுபவ உரையாதலால் இந்த அளவில்தான் இதற்கு விளக்கம் தர முடிகிறது. பருவ சத்தி - பொருள்கட்குரிய இளமை முதலிய பருவங்களை வெளிப்படுத்தும் சத்தி. அதிட்டித்தல் - இடமாக நின்று இயக்குதல். மயக்கம் கலப்பு ஒன்றி விளங்குவதாவது ஒரு தத்துவமாய் இயலுவது; இத் தத்துவங்கள் உயிர் அணுவில் அடியில் தங்குதலால் அதன் முதற் கூற்றை அடி என்று அறிவிக்கின்றார். உயிரைப் புருஷ தத்துவத்தில் இயக்கிய பின்பே அறிவருளுவது நிகழும் என அறிக. ஒளி நடன - ஒளி மயமான ஞான நடனம். உயர்தரமான இயல்பையுடையது இச் சிவபரம் பொருள் என்பாளாய், “ஒளி நடனம் புரியும் தர இயலிற்று இது” என உரைக்கின்றாள். இயலிற்று - இயல்புடையது. சிறிய தமியள் - அறிவால் சிறியவளாய்த் தனிமையுற்றவள்.

     (43)