5668. சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார்
விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.
உரை: சோதி! சோதி மலையின் ஒரு பகுதி சோதி வடிவாய் அதன்கண் மற்றொரு பகுதி ஞான சொரூபமாய் மூன்றாம் பகுதியில் சோதி ஞான சொரூப மயமாய் விளங்கி மேலே உரைக்கப்பட்ட ஐம்பூதக் கருவுகளுக்கு வடிவு வண்ணம் இயல் ஆகிய முப்பொருளும் நல்கித்தான் முதலும் நடுவும் இறுதியும் இல்லாத இன்ப உருவாய் அம்பலத்தில் ஆடி அருளுகின்ற சிவத்தின் இரண்டாகிய திருவடியின் பெருமையைப் பிரமனும் திருமாலும் உருத்திரரும் அறியார் என்றால் திருவடியின் நற்பயனை யான் அறிய முடியுமோ? நீயே சொல். எ.று.
பரம்பொருளாகிய சிவபெருமான் சோதி மயமாய் மலைபோல் இருப்பது பற்றி அவரை, “சோதி மலை” என்று சொல்லுகின்றாள். அதற்கு மூன்று முடிகளைக் கற்பித்து ஒரு முடி சோதி வடிவம் மற்றொரு முடி ஞான சொரூபமும் மூன்றாவது முடி இரண்டும் கலந்த இயல்பும் உடையவாம் என்பாளாய், “ஒரு தலையில் சோதி வடிவாகி மற்றோர் தலை ஞான சொரூப மயமாகி வேறொரு தலையில் உபய வண்ணமாகி” என்று உரைக்கின்றாள். நிலம் முதலிய பூதங்களின் கருவை “ஐங்கரு வகை” என்று கூறுகின்றாள். ஒவ்வொரு கருவுக்கும் வடிவும் வண்ணமும் இயலும் கொடுப்பதால், “முப்பொருளும் உதவி” என்று மொழிகின்றாள். இயல் - தன்மை. வண்ணம் - நிறமுமாம். சிவானந்த சொரூபத்திற்கு ஆதி அந்தம் இல்லை என்பது பற்றி, “ஆதி நடு அந்தம் இலா ஆனந்த உருவாய்” என இயம்புகின்றாள். வேதியன் - பிரமன். (44)
|