5669.

     பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம
          பூஇருபத் தைம்பூ வாய்ப் பூத்துமலர்ந் திடவும்
     நாஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
          நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
     மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
          வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
     பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
          பகர்த்திடவல் லுநள்அல்லேன் பாராய்என் தோழி.

உரை:

     தோழி! விண்ணாகிய பூவின்கண் முப்பூவும் ஐம்பூவும் எழுபூவும் ஒன்பது பூவும் இருபத்தைந்து பூவாகவும் பூத்து மலரவும் நாவாகிய ஒரு கருவி மணம் வேறாகவும் வண்ணம் வேறு வேறாகவும் பொருந்தி விளங்கவும் அதன்கண் நற்பயன் மாத்திரம் ஒன்றாக இருப்ப அதன் நடுவே நின்று பெரிய ஞான நடனம் புரிகின்ற மணம் கமழும் மலர் போன்ற திருவடியின் பாடற்கமைந்த பெருஞ்சிறப்பை எடுத்துரைப்பவர் யாவரே ஆவர்; சிறியவளாகிய நான் சொல்ல வல்லவளாகேன். எ.று.

     முன்னர் (5657) ஏழு பூக்களைக் கூறினாராதலால் இங்கே அவற்றை விரித்து, “நவமாம் பூ இருபத்தைந்தாம் பூ பூத்து மலர்ந்திட” என்று புகல்கின்றார். இந்திரியங்கள் ஐந்தனுள் நா ஒன்றே எடுத்துக் கூறப்பட்டமையின் ஏனை மூக்கு கண் முதலிய கருவிகளை உபலக்கணத்தால் வருவித்துக் கொண்டு, “வணம் வேறு வேறா நண்ணி விளங்குறவும்” என்று விளம்புகின்றார். விளையும் நற்பயன் ஒன்றாயினும் அதன் நடுவே நின்று இறைவன் நடனம் புரிகின்றான் என்பது கருத்து பா ஒன்று - பெருந்தகைமைப் பாட்டால் பாடற்கமைந்த பெருந்தன்மை.

     (45)