138. தலைவி தலைவன் செயலைத் தாய்க்குரைத்தல்
அஃதாவது, ஆன்மாவாகிய தலைமகள் தன்பால் வந்து தன் கையைப் பற்றிய தலைவன் செயல் வகையையும் சொற்களையும் தானே தன் தாய்க்குக் கொண்டெடுத்து உரைப்பதாம். தலைவி என்றது பசுத்தோல் நீங்கிய ஆன்மா. தோழி என்பது திருவருள் ஞானம். நற்றாய் என்பது சிவசத்தி. சிவபோகப் பேற்றுக்குரிய சிவயோகம், சமவாயம், சையோகம், சம்யுத்த சையோகம் என மூவகைப்படும். அவற்றுள், “என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா” என்பது சையோக சிவசம்பந்தம் என அறிக.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 5670. அன்னப்பார்ப் பால் அழ காம்நிலை யூடே
அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்
சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே
உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே
ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே
என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
உரை: அம்மா! அன்னங்களும் அவற்றின் பார்ப்புக்களும் வாழும் பொய்கை நிறைந்த அழகிய இடத்தில் அம்பலம் செய்துகொண்டு அதன்கண் நின்று ஆடல்புரியும் அழகராகிய சிவமாகிய தலைவர் என்னுடைய உயிர்த்தோழியும் நானும் கூடியிருந்து சூதாடுகின்ற இடத்துக்கு வந்து என்னை நோக்கி, “உன்னைப் பார்த்துப் பின்னர் உன்னுள் இருக்கின்ற என்னைப் பார்க்காமல் உலகியலைப் பார்த்து நினைவு சிதறி வருந்துகின்ற பெண்ணே இப்போது என்னைப் பார்ப்பாயாக” என்று சொல்லுகின்றார்; அவ்வளவில் நில்லாது என் கையையும் பிடிக்கின்றார்; அவர் கருத்து என்னவோ தெரியவில்லை. எ.று.
அன்னங்களும் அவற்றின் பார்ப்புக்களும் வாழ்கின்ற பொய்கையை, “அன்னப் பார்ப்பு” என்றே கூறுகின்றாள். பார்ப்பு - குஞ்சுகள். அன்னங்கள் வாழும் பொய்கைகள் நிறைந்த இடம் இயற்கையழகு பொலிதலால் அதனை, “அழகாம் நிலை” என்று அறிவிக்கின்றாள். துன்னப் பார்த்தல் - நெருங்கி வந்து பார்த்தல். சூதாடுகின்ற கழல் - சூது விளையாடுகின்ற இடம். ஆன்மாவாகிய உன்னைப் பார்த்தால் உன்னுள்ளே ஆன்ம நாயகனாகிய என்னைப் பார்க்கலாம்; அது செய்கின்றாய் இல்லை என்று கூறுவாளாய், “உன்னைப் பார்த்து உன்னுள்ளே என்னைப் பாராதே” என்றும், உலகியற் சூழலைப் பார்ப்பதால் ஞானப் பயனில்லை என்பாளாய், “ஊரைப் பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே” என்றும் உரைக்கின்றாள். ஊர் என்றது உலகியற் சூழல். இதனால், உன்னுள்ளே இருக்கின்ற என்னைப் பார்த்தால் உலகியல் மாயையாகிய மறைப்பு நீங்கும்; அதன் பயனாக என்னுடைய சிவசையோக சம்பந்தம் உனக்கு எய்தும் என்ற கருத்தால் தலைவி கையைப் பிடிக்கின்றார் என அறிக. (1)
|