5672.

     அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே
          அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்
     உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம் பாடி
          உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
     புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே
          பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்
     இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
          என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

உரை:

     அம்மா! அருளற நெறியை விரும்பி ஒழுகுகின்ற என்னை அன்புடன் ஆண்டுகொண்டு அருட்பெருஞ் சோதியாய் அம்பலத்தில் ஆடுகின்ற சிவமாகிய அழகர் உறக்கத்தைத் தவிர்த்தற் பொருட்டு அவருடைய திருச்சிற்றம்பலத்தைப் பாடி அதன்கண் தோன்றுகின்ற ஞான விளக்கும் பெற்று அவரைத் துதிக்கின்ற போது என்பால் வந்து புறத்தார் அறிய அன்பு செய்வாரைப் போல இல்லாமல், “பெண்ணே நீ யோகாந்தமாகிய பொற்கம்பத்தின் மேல் ஏறிக்கொண்டாய்; அப்பால் இருப்பது சிவசொர்க்கமாதலால் அதனை விட்டுக் கீழே இறங்காதே” என்று சொல்லுகின்றார்; பின்னர் என் கையைப் பிடிக்கின்றார்; அவர் கருத்து என்னவோ? தெரியேன். எ.று.

     அறம் என்றது திருவருளாகிய நல்லறம். அருட்பெருஞ் சோதி - அருள் ஞானத்தை நல்கும் பெருஞ் சோதி. உறங்காத வண்ணம் - மறவா வண்ணம். சிற்றம்பலத்தைப் பாடும் பொழுது ஞான விளக்கும் தோன்றுதலால் அதனை, “சிற்றம்பலம் பாடி உதிக்கின்ற ஒண்மை” என்று உரைக்கின்றாள். புறங்காதல் - புறத்தே உள்ளவர் காணச் செய்யும் பொய்க் காதல். சிற்றம்பலத்தைப் பாடும்போது தோன்றுகின்ற ஒள்ளிய சிவஞானம் பொன்ஒளி விளங்கும் கம்பம்போல் தோன்றுதலால், “பொற் கம்பம்” என்று சொல்லுகின்றாள். அதன் உச்சியில் இருப்பது சிவானந்த நிலையமாகிய சொர்க்கம் என்பது பற்றி “சொர்க்கம் அப்பால்” என்று குறிக்கிறாள்.

     (3)