5673. அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த
அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு
நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே
பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
உரை: அம்மா! முன்னொருநாள் என்பால் வந்து என்னை ஆண்டருளிய தலைவரும் ஞானவமுதம் வழங்குபவரும் மெய்யன்பரும் அழகருமாகிய சிவபெருமான், பொழுதை நல்வழியில் கழிக்கின்ற மகளிரோடு நான் கூடி இருந்து சிற்றம்பலத்தைப் பாடி மகிழும்பொழுது என்னை நோக்கி, “நாம் உன்பால் வந்து அடையும் காலம் பின்பொரு நாள் என்று எண்ணிப் பலவற்றைப் பேசித் திரியாதே; பெண்ணே பேரருள் சோதியில் உன்னைப் பெரிய மணம் செய்கின்ற நாள் இந்நாளே ஆகும்” என்று சொல்லி என் கையைப் பிடிக்கின்றார்; அவருடைய கருத்து என்னவோ அறியேன். எ.று.
சிவஞானம் தந்து சிறப்பித்த நாளை, “ஆண்டு அருள் செய்த அந்நாள்” என்று அறிவிக்கின்றாள். சிவஞானமாகிய அமுதத்தைத் தருபவர் என்றற்கு, “அமுதர்” என்று குறிக்கின்றாள். ஞானப் பேற்றுக்குரிய தலைவியாதலால் தன்னுடைய நண்பர்களை, “நன்னாள் கழிக்கின்ற நங்கையர்” என்று புகழ்கின்றாள். வேண்டாதவற்றைப் பேசுவதைப் “பிதற்றுதல்” என்பர். பேரருட் சோதிப் பெருமணமாவது பெரிய திருவருள் ஞான ஒளியில் சிவமாக்குதல். சிவபோகப் பேற்றுக்குரிய சிவயோகம் முன்னர் நிகழ்வது விளங்க, “என் கை பிடிக்கின்றார்” எனத் தலைவி உரைக்கின்றாள். (4)
|