5674. தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்
சத்தியர் உத்தமர் நித்தம ணாளர்
ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்
உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்
அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே
அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
உரை: அம்மா! தவறான சொற்களைப் பேசுகின்றவர்களுடைய உள்ளத்தை அடைய நினையாதவராகிய சத்துவ குணசீலரும் உத்தமரும் நித்திய கல்யாண குணங்களை உடையவருமாகிய சிவ பெருமான் ஒப்புக்கூற முடியாத மெய்ஞ்ஞானம் நிலவும் அவருடைய சிற்றம்பலத்தின் உண்மைச் சிறப்பைப் பாடிக்கொண்டு அவருடைய சமூகத்தில் நின்றேனாக, “பெண்ணே, அன்புடைய நின்னை யாம் இன்பமாகக் கூடுவது இப்போதே ஆகும்” என்று சொல்லி என் கையைப் பிடிக்கின்றார்; அவர் கருத்து என்னவோ தெரியவில்லை. எ.று.
சிவசன்மார்க்கத்துக்குரிய அல்லாத சொற்களைப் பேசுபவரை, “தப்போதுவார்” என்றும், அவருடைய மனங்கள் தூய அல்லவாதலால், “சார்ந்திட உன்னார்” என்றும் இயம்புகின்றாள். சத்துவ குணமே உருவாகியவர் என்றும், அனந்த கல்யாண குணங்களை உடையவர் என்றும் கூறுபவள், “சத்தியர்” என்றும், “நித்திய மணாளர்” என்றும் உரைக்கின்றாள். மெய்ப்போதல் - சிவஞானம். மன்று - அம்பலம். உண்மை - அழியாச் சிறப்பு. அயர்தல் - தளர்தல். (5)
|