5675. மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்
வித்தகம் அம்பலம் மேவும் அழகர்
இக்குல மாதரும் யானும்என் நாதர்
இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது
பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே
பூரண நோக்கம் பொருந்தினை நீதான்
எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
உரை: அம்மா! மெய்ம்மை ஒழுக்கம் உடையவர்கள் போற்றித் துதிக்க விளங்குகின்ற ஞான மணவாளரும் வித்தகரும் அம்பலத்தில் எழுந்தருளும் அழகருமாகிய சிவபெருமான் இங்கே இருக்கின்ற இக்குல மகளிரும் யானும் கூடி இருந்து என்னுடைய நாயகராகிய அவருடைய இனிய அருள் விளையாடல்களைப் பேசி மகிழும்போது வந்தருளி, “பொய் ஒழுக்கம் உடையவர்களின் நலங்களைப் பேசித் தனிமையுற்று வருந்துதல் வேண்டா; பெண்ணே, நீ நம்முடைய முழுத்த அருள் நோக்கத்தைப் பெற்றனை; ஆதலால் நீ வேறு குலம் பேச வேண்டாம்” என்று சொல்லி என் கையைப் பிடிக்கின்றார்; அவர் கருத்து என்னவோ தெரியவில்லை. எ.று.
மெய்ம்மையான ஒழுக்கம் உடையவர்களை, “மெய்க்குலம்” என்று விளம்புகின்றாள். ஞான மணங் கமழும் திருமேனி உடையவராதலால், “மணாளர்” என்கின்றாள். வித்தகர் - எல்லாம் வல்லவர். சிவனுடைய அருட் செயல்கள் எல்லாம் இன்பம் பயப்பனவாதலால் அவற்றை, “இன்னருள் ஆடல்கள்” என இசைக்கின்றாள். பன்னுதல் - சொல்லுதல். பொய் ஒழுக்கம் உடையவர்களுடைய பேச்சுக்களை, “பொய்க்குலம்” என்று புகல்கின்றாள். புலம்புதல் - தனிமையுறுதல். பூரண நோக்கம் - முழுத்த அருள் நோக்கம். அருள் ஞான நாட்டம் பெற்ற பின் நீ உயர்குலத்தை எய்தினாய் என்பாளாய், “நீதிதான் எக்குலம் என்கின்றார்” என்று தலைவி உரைக்கின்றாள். (6)
|