5676. வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
சம்மத மாமட வார்களும் நானும்
தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
உரை: அம்மா! வெவ்விய மதச் செருக்கு பொருந்திய நெஞ்சையுடைய மக்களிடையே ந்தருள விரும்பாதவரும், வெம்மை மிகுந்த மெய்வலிமையைப் போக்கும் என்னுடைய அம்பலவாணருமாகிய சிவபெருமான், மனமொத்த மங்கையரும் நானும் சிவதத்துவக் கூறுகளைப் பேசிக்கொண்டு மனமொத்து மகிழும்போது என்பால் வந்து, “பெண்ணே, இம்மதத் தத்துவங்களைப் பேசிக் கீழ்மை அடைய வேண்டா; நீ ஒருமைத்தாகிய சிவோக பாவனை நிலையை அடைந்துள்ளாய்; உனக்குச் சிவோக நிலை தவிர வேறு மதம் இல்லை” என்று சொல்லி என் கையைப் பிடிக்கின்றார்; அவர் கருத்து என்னவோ தெரியவில்லை. எ.று.
சமய மத உணர்ச்சிகளால் தடித்த நெஞ்சம் உடையவர்களை, “வெம்மத நெஞ்சு” என்று விளம்புகிறாள். வெவ்விய செயல்களைப் புரியும் மெய்வலிமையை, “வெம்பலம்” என்று கூறுகின்றாள். சம்மத மாமடவார்கள் - ஒத்த நினைவும் ஒத்த சொல்லும் ஒத்த செயலும் உடைய இளம் பெண்கள். தத்துவம் என்றது சிவதத்துவமாகும். அவை நாதம், விந்து, சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை என ஐந்தாகும். பேச்சினிடையே கருத்து வேற்றுமை உண்டாகாமை புலப்பட, “ஒத்துறும் போது” என்று உரைக்கின்றாள். இறங்குதல் -கீழ் நோக்கிச் செல்லுதல். சிவோகம் என்பது நான் சிவமானேன் என்னும் பொருளது. சிவம் ஒன்றாதலின் அது சிவோகம் எனப்படுகின்றது. நான் சிவமாயினேன் என எண்ணும் நிலை சிவோக பாவனை எனப்படும். அது மிக உயர்ந்த நிலையாதலால் அதனை நீ எய்தினை என்பாளாய், “ஏக சிவோகத்தை எய்தினை” என எடுத்துரைக்கின்றாள். எம்மதம் என்ற வினா உனக்கு என ஒரு மதமும் இல்லை என்னும் பொருள் குறித்து நின்றது. (7)
|