5677.

     பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர்
          பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார்
     வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே
          மன்றகம் பாடி மகிழ்கின்ற போது
     ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்ணே
          எம்முடன் புன்னை இணைந்திங் கெமக்கே
     ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா
          என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

உரை:

     அம்மா! மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் படைத்தளிக்கும் உயர்ந்த பண்புடையவரும், பற்றாகிய அம்பலத்தையே சிறப்புற ஓதுகின்றவர் போற்றுகின்ற திருச்சிற்றம்பலத்தில் எழுந்துருள்பவருமாகிய சிவபெருமான், கச்சணிந்த கொங்கைகளை உடைய பெண்களோடு கூடித் திருச்சிற்றம்பலத்தை நான் இனிமையாகப் பாடி மகிழ்கின்ற பொழுது என்பால் வந்து என்னை அருளொழுக நோக்கி, “பெண்ணே உனக்கு உடம்பு ஒன்றே என நினைக்க வேண்டா; எம்முடைய உடம்பும் உன்னுடைய உடம்பில் இணைந்துளது; அதனால் எனக்கு இரண்டுடம்பாம்” என்று சொல்லி என் கையைப் பிடிக்கின்றார்; அவர் கருத்து என்னவோ தெரியவில்லை. எ.று.

     பற்றம்பலத்தார் - எமக்குப் பற்றாவது பரமன் ஆடல் புரியும் அம்பலமே என்று எண்ணும் திண்ணிய பெரியோர். மன்றகம் - பரமன் ஆடும் அம்பலம். மன்றம் - மன்றகம் என வந்தது. ஏருடம்பு - அழகிய உடம்பு. திருவருள் ஞானக் கலப்பால் பூதவுடம்பு பொன்னுடம் பாதலை நினைப்பிக்குமாற்றால், “ஏருடம்பு ஒன்றென எண்ணேல்” என இயம்புகின்றாள். சிவத்தின் திருமேனி கலந்து விளங்குதலால், “எம்முடம்பு உன்னை இணைந்தது” ஆதலால் எமக்கு இங்கே ஈருடம்பாம் என்பாளாய், “இங்கு எமக்கே ஈருடம்பு என்கின்றார்” என்று தலைவி சொல்லுகின்றாள். இதன்கண் ஆன்ம நாயகி சிவோக நிலை பெற்றுச் சிவத்தோடு இணைந்து நிற்பதும் அதனை ஏற்றருளிச் சிவம் ஈருடம்பு என்பதும் யோகாந்த ஞானானுபவத்தால் உணரத் தக்கதாம். அந்த அனுபவம் இல்லாமையால் உரைகாரரால் விளங்க முடியவில்லை எனக் கொள்க.

     (8)