5678.

     மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்
          மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்
     சிறப்பற்ற மங்கையர் தம்மொடு நான்தான்
          சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது
     புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே
          புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே
     இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா
          என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

உரை:

     அம்மா! மறத்தல் இல்லாத மனமுடைய ஞானிகளிடையே வாழ்கின்ற அருள் வள்ளலும் மனங்களால் விளையும் பற்றறுத்த பெரு மக்களால் போற்றப்படுகின்ற ஞான மணவாளருமாகிய சிவபெருமான், ஞானச் சிறப்புடைய மகளிரோடு கூடிக்கொண்டு நான் அவருடைய சிற்றம்பலத்தைப் பரவிப் பாடி இருந்தபோது புறப்பற்றாகிய எனது என்னும் மமகாரத்தைப் போக்கத் தொடங்காமல், “பெண்ணே, புலைத் தன்மை பொருந்திய நான் என்னும் அகங்காரத்தைப் போக்கி விட்டாய்; இனி உனக்கு இறப்பு என்பது இல்லை” என்று சொல்லி என் கையைப் பிடிக்கின்றார்; அவர் கருத்து என்னவோ தெரியவில்லை. எ.று.

     மறத்தலும் நினைத்தலும் உடைய மனத்தின்கண் மறக்கும் தன்மையைப் போக்கியபோது நினைப்பே நிகழுமாதலால் அதனைச் செய்தொழுகுகின்ற பெருமக்களிடத்தே நிலையாக வீற்றிருப்பவராதலின் சிவபரம்பொருளை, “மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்” என்றும், நின்மலராகிய சிவஞானிகள் எப்பொழுதும் வாழ்த்துகின்றமை பற்றி, “மலப்பற்று அறுத்தவர் வாழ்த்தும் மணாளர்” என்றும் விதந்து கூறுகின்றாள். ஞானத்தால் சிறப்புடைய பெண்களைச் “சிறப்புற்ற மங்கையர்” என்று பாராட்டுகின்றாள். புறப்பற்று என்பது எனது என்னும் சொல்லுக்கு அகப்படும் பொருட் பற்று. அதன்கண் உடல் கருவி கரணங்கள் யாவும் அடங்கும். உடலுக்குள் இருக்கின்ற எலும்பு நரம்பு தசை முதலிய பொருள்களை, “புலை அகப்பற்று” என்று புகல்கின்றாள். அவற்றின்பால் பற்று நீங்கிய விடத்து இறத்தலும் நீங்குவதால், “இறப்பற்றது என்கின்றார்” என்று கூறுகின்றாள்.

     (9)