139. நற்றாய் செவிலிக்குக் கூறல்

    அஃதாவது, நற்றாயாகிய சிவசத்தி செவிலியாகிய ஆரணி, ஜெனனி, ரோதைத்திரி ஆகிய சத்திகளுக்குத் தலைவியாகிய ஆன்ம சிற்சத்தியின் யோகாந்த ஞானானுபவங்களைக் கண்டு உரைப்பதாம்.

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5680.

     உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என்
          உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்
     அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை
          அதிசயம் அதிசயம் என்றாள்
     துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை
          தொட்டனன் பிடித்தனன் என்றாள்
     புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்
          பொங்கினாள் நான்பெற்ற பொன்னே.

உரை:

     நான் பெற்ற மகளாகிய அழகிய மகள் உண்மை ஞானத்தைப் பெற்ற பெரியவர்களுக்கும் உணர்தற்கு அரியவனாகிய சிவபெருமான், என் மனத்தின்கண் அமர்ந்திருக்கின்றான் என்றும், அப் பெருமகன் தனது திருவருள் ஞான மணங் கமழும் மாலையை எனக்கு அணிந்தருளினாதலால் இந்த அதிசயத்தை என்னவென்று உரைப்பேன் என்றும், நான் என் தோழியரை விட்டு நீங்கித் தனித்திருந்த பொழுது என் கையைப் பற்றினான் என்றும், என்னை முயங்கிக் கலந்தான் என்றும் மகிழ்ச்சி மீதூர்ந்து என்னிடம் சொல்லித் திளைக்கின்றாள் என்று நற்றாய் கூறுகின்றாள். எ.று.

     பதி ஞானத்தால் பதிப்பொருளை உணர்ந்த பதி ஞானிகளை, “உணர்ந்தவர்” என்று உரைக்கின்றாள். உணர்வரியான் - உணர மாட்டாதவன். அப்பெருமானை நான் உணர்ந்துகொண்டேன்; அவன் என் மனத்துக்குள்ளே எழுந்தருளி இருக்கின்றான் என்பது குறிப்பு. உள்ளத்தில் எழுந்தருளிய பரமன் தனது திருவருள் ஞானத்தை எனக்கு வழங்கி அருளினான் என்பாளாய், “எனக்கே அருள் மணமாலை அணிந்தனன்” என்று சொல்லித் தன்னில்தானே அதிசயிக்கின்றாள் என்பாளாய், “அதிசயம் அதிசயம் என்றாள்” என நற்றாய் மொழி கின்றாள். துணிதல் - நீங்கித் தணித்தல். நான் அவனது சிவயோக போகத்தை நுகர்ந்தேன் என வற்புறுத்துவாளாய், “புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப் பொங்கினாள்” என்று புகல்கின்றாள். சிவபோகத்தால் மேனி பொன்னுரு பெற்றமை புலப்பட, “நான் பெற்ற மகளே என்னாமல் பொன்னே” என்று போற்றி உரைக்கின்றாள்.

     (1)