5682. புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய்
புண்ணியம் புகல்அரி தென்றாள்
தண்ணிய மதியின் அமுதெனக் களித்த
தயவைநான் மறப்பனோ என்றாள்
எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான்
என்னையோ என்னையோ என்றாள்
அண்ணிய பேரா னந்தமே வடிவம்
ஆயினாள் நான் பெற்ற அணங்கே.
உரை: நான் பெற்ற அணங்காகிய என் மகள், சிவபுண்ணியத்தால் பெறுதற்குரிய சிவ பரம்பொருளாகிய சிவமூர்த்தியை எனக்குக் கணவனாகக் கொண்டு முயங்கினேனாதலால் நான் செய்த புண்ணியத்தின் சிறப்பு சொல்லுதற்கரியது என்றும், துவாதசாந்தத்தில் விளங்கும் அமுத சந்திரனுடைய குளிர்ந்த அமுதத்தை எனக்குத் தந்தருளுதற்கு ஏதுவாகிய அவருடைய தயவை நான் ஒருபோதும் மறக்கலாகுமோ என்றும், யான் எண்ணியவற்றை எண்ணியவாறே குறைவின்றி எனக்குத் தந்தருளுகின்றான்; அவனுடைய சிறப்பை என்னென்பேன் என்றும் சொல்லி அடைதற்கமைந்த சிவப் பேரானந்தமே தனக்கு வடிவமாக நின்று விளக்கமுற்றாள் என்று நற்றாய் செவிகட்குத் தெரிவிக்கின்றாள். எ.று.
சிவபுண்ணியத்தாலன்றி எய்தலாகாமை பற்றிச் சிவனை, “புண்ணியபதி” என்று செவிலி புகல்கின்றாள். புண்ணிய பதியைப் புண்ணியத்தால் பெற்றமை தோன்ற, “நான் செய் புண்ணியம் புகலரிது” என்று தன் மகள் சொல்கின்றாள் என்றும், சிவயோகத்தால் பெறப்படும் துவாத சாந்த ஞானச் சந்திரனுடைய ஞானாமுதத்தை உண்டு தேக்கினமை விளங்க, “தண்ணிய மதியின் அமுது எனக்கு அளித்த தயவை நான் மறப்பனோ” என்றும் தலைவி சொல்லுகின்றாள். எண்ணிய எண்ணியாங்கு எய்துதலால் வியப்பு மிகுந்து தலைவி உரைப்பது தெரிய “எண்ணிய அனைத்தும் ஈந்தருளுகின்றாள் என்னையோ என்னையோ” என்றும் தலைவி வியப்பதை நற்றாய் எடுத்து இயம்புகின்றாள். அதனை உரைக்கும்போது அவள் இருந்த மகிழ்ச்சி நிலையைச் சிறப்பிக்கின்ற நற்றாய், “அண்ணிய பேரானந்தமே வடிவாமாயினாள்” என்று மொழிகின்றாள். அணங்கு - தெய்வப்பெண். (3)
|