5683.

     சத்திய ஞான சபாபதி எனக்கே
          தனிப்பதி ஆயினான் என்றாள்
     நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப
          நிலைதனில் நிறைந்தனன் என்றாள்
     பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப்
          பேறெலாம் என்வசத் தென்றாள்
     எத்திசை யீரும் ஒத்திவண் வருக
          என்றனள் எனதுமெல் லியலே.

உரை:

     உண்மை ஞான சபாபதியாகிய கூத்தப் பெருமான் எனக்கு ஒப்பற்ற தலைவனாயினான் என்றும், நான் நிலையான வாழ்வு பெற்று இன்ப நிலையில் நிரைந்துள்ளேன் என்றும், மயக்கமுற்ற உலக மக்களே, கன்மயோக ஞான சித்திகளால் பெறலாகும் நலன்கள் யாவும் என்பால் அமைந்துள்ளன என்றும், எல்லாத் திக்குகளிலும் வாழும் மக்களாகிய நீங்கள் மனமொத்து என்பால் வருக என்றும் என்னுடைய மெல்லிய இயல்புடைய மகள் விளம்புகின்றாள் என்று நாற்றாய் சொல்லியவறாம். எ.று.

     உண்மை ஞானம் நிறைந்த சபைக்குத் தலைவன் சிவபெருமான் என்பாளாய், சத்திய ஞான சிவபெருமானை, “சத்திய ஞான சபாபதி” என்று சிறப்பிக்கின்றாள். அப்பெருமான் தனக்குப் பதியாயினமையின் தான் நித்திய வாழ்வு பெற்று இன்ப நிலையில் நிறைந்திருப்பதை எடுத்துரைக்கின்றாள். உலகியல் மயக்கம் தருவதுபற்றி அதன்கண் வாழும் மக்களை, “பித்தியல் உலகீர்” என்றும் பேசுகின்றாள். கன்மயோக ஞானங்களால் பல்வகைச் சித்திகளைப் பெறல் வேண்டும் என அலைகின்றீர்கள்; அவை யாவும் என்பால் அமைந்துள்ளன எனத் தெரிவிப்பாளாய், “சித்திப் பேறெலாம் என் வசத்தன” என இயம்புகின்றாள். நாற்றிசையிலும் உள்ள மக்கள் மனவொருமையின்றி வருந்துவது கண்டு “எத்திசையீரும் ஒத்து இவண் வருக” என உரைக்கின்றாள். திண்மை மிக்க உள்ளத்தவளாயினும் பெண்மைக்கமைந்த மெல்லிய இயல்பு குன்றாதவள் என்பாளாய், “எனது மெல்லியலே” என இயம்புகின்றாள்.

     (4)