5684. திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்
சிந்தையில் கலந்தனன் என்றாள்
பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப்
பேசுதல் அரிதரி தென்றாள்.
இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார்
யாண்டுளர் யாண்டுளர் என்றாள்
மருமலர் முகத்தே இளநகை துளும்ப
வயங்கினாள் நான்பெற்ற மகளே.
உரை: அழகிய மணிகள் பதித்த அம்பலத்தில் எழுந்தருளும் ஒப்பற்ற பெரும் பதியாகிய நடராசப் பெருமான் என் சிந்தையில் எழுந்தருளி வேறறக் கலந்துகொண்டான் என்றும், நான் பெருமையால் மேம்பட்டு உள்ளேனாதலால் என்னுடைய பெரிய தவத்தின் சிறப்பை யாவராலும் அறிந்து பேச முடியாது என்றும், இகமும் பரமுமாகிய இரண்டிலும் இகமாகிய ஒன்றிலேயே இனிய ஞான நலன்களைப் பெற்றவர் யார் இருக்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்து, மணம் கமழும் மலர் போன்ற தனிமுகத்தில் முறுவல் இன்னகை சிறக்க விளங்குகின்றாள் நான் பெற்ற மகளாகிய தலைவி என நற்றாய் நவில்கின்றாள். எ.று.
அழகிய மணிகள் பதித்திருப்பதால் அம்பலத்தை, “திருமணிப் பொது” என்று சிறப்பிக்கின்றாள். சிவபெருமான் தன் உள்ளத்தில் உயிரும் தானுமாய்க் கலந்திருப்பது விளங்க, “சிந்தையில் கலந்தனன்” என்று செப்புகின்றாள். அதனால் தான் பெற்ற பெருமையை ஒருவராலும் எடுத்துரைக்க முடியாது என வியந்து, “என் பெரும் தவத்தைப் பேசுதல் அரிதரிது” என மொழிகின்றாள். இம்மையிலும் மறுமையிலும் பெறுதற்குரிய ஞான நலத்தை இம்மை வாழ்விலேயே எய்திவிட்டேன் என இறுமாந்த நிலையில் பேசுகிறாள் என்பாளாய், “இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டுளர்” எனத் தலைவியைப் பற்றி நற்றாய் இசைக்கின்றாள். இவற்றை உரைக்கும்போது அவள் முகத்தில் புன்னகை தவழப் பூரிக்கும் சிறப்பை, “முகத்தே இளநகை துளும்ப வயங்கினாள்” என நற்றாய் மகிழ்ந்துரைக்கின்றாள். (5)
|