5685.

     வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்
          மாலையோ காலையோ என்றாள்
     எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே
          ஏவல்செய் கின்றன என்றாள்
     தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்
          சித்தியும் பெற்றனன் என்றாள்
     துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்
          சோர்விலாள நான்பெற்ற சுதையே.

உரை:

     அருள் வள்ளலாகிய நடராசப் பெருமானைக் கூடி இன்புற்றேனாதலால் எனக்கு இது மாலைப் போதோ காலைப் போதோ இன்னதென்று அறிகிலேன் என்றும், இகழ்ச்சி சிறிதுமின்றி உலகம் அனைத்திலும் உள்ள நன்மக்கள் எனக்கு ஏவல் செய்கின்றனர் என்றும், அப்பெருமானுடைய ஞான அமுதத்தை உண்டு நித்திய உடம்பு பெற்று எல்லாச் சித்திகளையும் எய்தி இன்புறுகின்றேன் என்றும், என்னோடு சேர்ந்துள்ள இளமகளிரே என் நிலைமையைப் பார்ப்பீர்களாக என்றும், சோர்வு சிறிதுமின்றி அமுத மயமாகிய தனது மேனி நலம் குன்றாமல் விளங்குகின்றாள் என்றும் நற்றாய் உரைக்கின்றாள். எ.று.

     தனது இன்னருளை வரையாமல் வழங்குபவனாதலால் நடராசப் பெருமானை, “வள்ளல்” என்று பாராட்டுகின்றாள். அப்பெருமானைக் கலந்து இன்புறும் இடம் இராப்பகலற்ற இன்ப நிலையமாதலால், “இதுதான் காலையோ மாலையோ” என்றும், வாய் வெருவுகின்றாள் என்றும், அச்சிறப்பால் உலகில் வாழும் ஞானவான்கள் பலரும் என்னை இகழ்தல் இன்றி ஏவல் செய்கின்றனர் என்பாளாய், “எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே ஏவல் செய்கின்றன” என்றும், அப்பெருமானுடைய அருள்ஞான அமுதத்தை உண்டதனால் அழியா உடம்பும் அரிய சித்திகள் பலவற்றையும் பெற்றுள்ளேன் என்றும் சொல்லி, என் மகள் அடைகின்ற மகிழ்ச்சியை வந்து பார்ப்பீர்களாக என்பாளாய், “துள்ளிய மடவீர் காண்மினோ” என்று நற்றாய் சொல்லுகின்றாள். மடவீர் - இளம் பெண்களே. அம்மவோ, நான் சொல்வதைக் கேட்பீர்களாக.

     (6)