5686. கனகமா மன்றில் நடம்புரி பதங்கள்
கண்டனன் கண்டனன் என்றாள்
அனகசிற் சபையில் ஒருபெரும் பதிஎன்
அன்பிலே கலந்தனன் என்றாள்
தினகர சோமாக் கினிஎலாம் எனக்கே
செயல்செயத் தந்தனன் என்றாள்
தனகரத் தெனைத்தான் தழுவினான் என்றாள்
தவத்தினால் பெற்றநம் தனியே.
உரை: பொன்னாலாகிய பெரிய அம்பலத்தின்கண் திருக்கூத்தாடுகின்ற கூத்தப் பெருமானுடைய திருவடிகளை யான் கண்ணாரக் கண்டேன் என்றும், அளவுக்கடங்காத ஞான சபையில் எழுந்தருளும் ஒப்பற்ற பெரும் தலைவனாகிய அவன் என் அன்பிலே கலந்து கொண்டு சூரியனும் சந்திரனும் நெருப்புமாகிய எல்லாம் யான் ஏவின செய்யுமாறு எனக்குத் தலைமை தந்தான் என்றும், தன்னுடைய திருக்கைகளால் என்னைத் தழுவிக் கொண்டான் என்றும், யான் செய்த தவத்தால் பிறந்த தனிச் சிறப்புடைய மகள் உரைக்கின்றாள் என்று நற்றாய் எடுத்துரைக்கின்றாள். எ.று.
கனக மாமன்று - பொன்னாலாகிய பெரிய அம்பலம். தேவதேவர்களாலும் காண்பதற்கரியவாயினும் நான் கண்டு மகிழ்ந்தேன் என்பாளாய், “நடம் புரி பதங்கள் கண்டனன் கண்டனன்” என்றும், அப்பெருமான் எல்லை இல்லாத ஞானசபையில் எழுந்தருளும் பதிப்பொருளாய்த் தோன்றி என்னுடைய உண்மையன்பில் அன்புருவாய்க் கலந்து கொண்டான் என்பாளாய், “அனக சிற்சபையில் ஒரு பெரும் பதி என் அன்பிலே கலந்தனன் என்றாள்” என்றும் சொல்லுகின்றாள். அவனுடைய கலப்பால் தான் பெற்ற பயனை, “தினகர சோமாக்கினி எல்லாம் எனக்கே செயல் செயத் தந்தனன்” என இயம்புகின்றாள். கனகம் - பொன். அனகசிற்சபை - எல்லை இல்லாத ஞான சபை. தினகரன் - சூரியன். சோமன் - சந்திரன். தனகரம் - தன்னுடைய கைகள் ஞானமாகிய மகளைத் தவத்தாலன்றிப் பெறலாகாமை புலப்பட, “தவத்தினால் யான் பெற்ற தனியே” என்று நற்றாயாகிய சிவசத்தி நவில்கின்றாள் என அறிக. (7)
|