5687.

     கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக்
          கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள்
     கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான்
          கடிமணம் புரிந்தனன் என்றாள்
     ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம்
          ஒளிஎனக் களித்தனன் என்றாள்
     இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள்
          என்தவத் தியன்றமெல் லியலே.

உரை:

     என் உள்ளத்தையே கொடி புனைந்து விளங்கும் பெரிய மணி இழைத்த அழகிய கோயிலாகக் கொண்டு எழுந்தருளி இருக்கின்றான் என்றும், மணம் கமழும் புதுப் பூக்களால் தொடுக்கப்பட்ட கண்ணியை முடியில் அணிந்துகொண்டு என்னைச் சிறப்புடைய நன்மணம் செய்துகொண்டான் என்றும், குறைவற்ற எல்லாம் வல்ல சித்துக்களாகிய ஞான ஒளியைத் தந்துள்ளான் என்றும், முகம் சுளித்துப் பேசுகின்ற நீங்களே பார்த்துக் கொள்வீர்களாக என்றும், தவத்தால் நான் பெற்ற மெல்லிய இயல்புடைய என் மகள் எடுத்துரைக்கின்றாள் என்று நற்றாய் மொழிகின்றாள். எ.று.

     பெருமனைகளிலும் கோயில்களிலும் கொடியணிந்து சிறப்பிப்பது மரபாதலால், “கொடிப் பெருமணிப் பொற்கோயில்” என்று கூறுகின்றாள். கடிப்புது மலர் - மணம் கமழும் புதிய பூக்கள். கண்ணி - தலையில் அணிந்துகொள்ளும் பூமாலை. கடிமணம் - சிறப்புடைய திருமணம். ஓடிப்போ - குறைவு. சித்தாம் ஒளி - கன்ம ஞான யோக சித்திகளாகிய அருள் ஒளி. இடிப்பொடு நொடித்தல் - முகம் சுளித்துக் கொண்டு பேசுவது.

     (8)