5688.

     வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு
          மாலைவந் தணிந்தனன் என்றாள்
     ஊழிதோ றூ ழிஉலவினும் அழியா
          உடம்பெனக் களித்தனன் என்றாள்
     ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும்
          அளிக்கஎன் றருளினான் என்றாள்
     ஏழியன் மாட மிசையுற வைத்தான்
          என்றனன் எனதுமெல் லியலே.

உரை:

     மங்கலம் பொருந்திய அழகிய அம்பலத்து எழுந்தருளும் இறைவனே என்பால் வந்து எனக்கு மணிமாலை சூட்டினான் என்றும், அதனால் பல்லூழிக் காலங்கள் கழியினும் அழியாத ஞான உடம்பினை எனக்குத் தந்தருளினான் என்றும், அதனோடு கடல் சூழ்ந்த உலகங்களையும் அண்டங்களையும் காத்தொழுகுக என்று உரைத்தருளினான்; அன்றியும் எழுவகை அமைந்த மாடத்தின் மேல் என்னை வைத்தருளினான் என்றும், மெல்லியல்புடைய என் மகள் உரைக்கின்றாள் என்று நற்றாய் செவிலிக்குக் கூறுகின்றாள். எ.று.

     வாழி - மங்கல மொழி. மணிமன்று இறைவன் -அழகிய அம்பலத்தில் எழுந்தருளும் இறைவன். எனக்கு மணமாலை அணிந்ததோடு எக்காலத்தும் அழியாத ஞானத் திருவுடம்பினைக் கொடுத்துள்ளான் என்றற்கு, “ஊழிதோறு ஊழி உலவினும் அழியா உடம்பு எனக்கு அளித்தனன்” என்று இயம்புகின்றாள். உலவுதல் - கழிதல். உலகங்களைத் தன்னிடத்தே கொண்டது அண்டம். அளித்தல் - காத்தல். ஏழியன் மாடம் - ஏழு நிலைகளைக் கொண்ட மாடமாகிய மாளிகை.

     (9)