5692. நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும்
வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி
வீதியில் நடப்பதென்நீ என்கின்றாய் தோழி.
வயந்தரும்இவ் வண்டபகிர் அண்டமட்டோ நாத
வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும்
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
உரை: எல்லாராலும் விரும்பப்பட்ட நடனத்தைச் செய்கின்ற நடராசப் பெருமானே உன்னுடைய நாயகர் என்றாலும் அவரை விரும்புகின்ற மற்றைய தலைவர்களைக் கண்ட பொழுது வியப்புடன் அவர்க்களுக்கு நல்ல சொல் ஒன்றும் சொல்லாமல் நீ வீதியிலே செருக்கி நடப்பது என்னையோ என்று என்னைக் கேட்கின்றாய்; தோழி, நான் சொல்வதைக் கேள்; வளம் பொருந்திய இந்த அண்ட பகிரண்டங்கள் மாத்திரம் அல்ல நாத தத்துவ எல்லைக்கு அப்பாலுமுள்ள நாட்டில் வாழ்பவர்க்கும் நான் அஞ்சுகின்ற குடியல்ல; நானோ திருச்சிற்றம்பலத்தின்கண் நிலைபெற இருந்து கூத்தாடுகின்ற சிவபெருமானுடைய திருவடிக்கே பணி செய்ய அமைந்த குடியாவேன் என அறிக. எ.று.
மன்னவரும் விண்ணவரும் தேவதேவர்களும் விரும்புகின்ற திருநடனமாதலால் சிவனை, “நயந்த நடநாயகர்” என்று தோழி நவில்கின்றாள். உன்னால் விரும்பப்பட்ட நாயகரை யாவர் விரும்பினும் அவரிடத்தே அன்பும் நன்மதிப்பும் கொள்ள வேண்டியது உனது கடமையாகவும் அதனைச் செய்யாது செருக்குற்று ஒழுகுவது நன்றன்று என்பாளாய், “நல்லுரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என்” என்று தோழி வினவுகின்றாள். அண்டங்களுக்கு அப்பாலுள்ளது நாததத்துவம் என்பது பற்றி, “நாத வரையோ” என்று கூறுகின்றாள். சிறுமைத் தன்மையுடையவர்க்கே பெருமை உடைய பிறரைக் கண்டவிடத்து அச்சமுண்டாகும் என்றும், அத்தகைய அச்சத்துக்கு ஏதுவாகிய சிறுமை என்பால் இல்லை என்றும் விடை கூறலுற்ற தலைவி, “மாநாட்டார் தமக்கும் பயந்த குடி அல்லடி” என்று சொல்லுகின்றாள். (3)
|