5693.

     கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக்
          கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும்
     நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய்
          நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி
     ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும்
          உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும்
     நடுங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
          நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே.

உரை:

     கடுமையான குணங்கள் உடையவர்களால் அடைதற்கு இயலாத திருநடனத்தைப் புரிகின்ற கூத்தப் பெருமானே நினக்குக் கணவராயினார் என்றாலும் பிறரைக் கண்டபொழுது நேர்மையான குணத்துடன் நேரே நின்று நல் வார்த்தைகள் சிலவற்றைச் சொல்லுகின்றாய் இல்லை; நங்கையாகிய தலைவியே இது என்னையோ என்று கேட்கின்றாய்; தோழி, சங்காரத்தில் ஒடுங்குகின்ற பல தத்துவர்களுக்கும் அத்தத்துவரை நடத்தும் தலைவர்களுக்கும் அவர்கட்கு மேலுள்ள தலைவர்களுக்கும் அஞ்சி நடுங்கும் குடிக்குரிய பெண் நானல்ல நான் திருச்சிற்றம்பலத்தே நடம் புரியும் சிவனுடைய திருவடிப் பணி செய்தற்கென்றே அமைந்த நற்குடி நங்கையாவேன். எ.று.

     கடுங் குணத்தோர் - நன்மை பயவாத குணத்தையுடையவர்; அவர்களால் சிவன் சேவடியை அடைதல் இயலாது என்பது விளங்க, “பெறற்கரிய நடத்தரசே” என்று சிவனைப் பாராட்டுகின்றாள். நடுங்குணம் - நடுக்குணம் என்பதன் விகாரம். நடுக்குணம் - நேர்மையான நடுநிலைப் பண்பு. உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமை நோக்காத நற்பண்பு நடுக்குணம் எனப்படுகின்றது. நங்காய் - பெண்களில் சிறந்தவளே. சிவனுடைய சங்காரக் காலத்தில் தத்துவங்களும் அவற்றில் நின்று திகழும் தத்துவ தேவர்களும் பிறரும் ஒடுங்கி ஒழிவதால் அவர்களை, “ஒடுங்கு பல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபயநிலைத் தலைவருக்கும்” என்று உரைக்கின்றாள். தத்துவராகவும் தத்துவத் தலைவராகவும் இருப்பவர்களை, “உபய நிலைத் தலைவர்” என்று ஓதுகின்றாள். நடுங்கு குடி - அச்சத்தால் நடுங்கி ஒடுங்கும் குடி. நாட்டிய நற்குடி - அமைக்கப்பட்ட நல்ல குடியில் தோன்றியவள்.

     (4)