5695. அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை
அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள்
உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால்
மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்
இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்
இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.
உரை: அறம் பொருந்திய தோழி! இவ்விடத்தே நீ சொல்லிய சொற்கள் எல்லாம் உண்மை யறிவில்லாதவருடைய சொற்களாகும்; எவ்வாறு எனில், நான் சொல்லுவதைக் கேட்பாயாக; உண்டு உறங்குவதும் பிறகு விழிப்பதும் பின்னர் உண்பதும் சாக்காடு எய்துவதுடன் மறுபடியும் பிறத்தலும் பின்பு பெறுவனவற்றைப் பெறுவதுமாய் வருந்துகின்ற மரவுணர்வுடைய உயிர்கள் பலர் தாம் செய்த விரதங்களால் மதத்தலைவர்களாகவும் பதத் தலைவர்களாகவும் அமைந்தனர்; அவர்கள்பால் இரக்கமின்றிப் பேசுவதால் ஒரு பயனுமில்லை என்று கருதி அம்பலத்தில் நடம்புரிகின்ற இறைவனுடைய திருவடிப் புகழையே யான் பேசிக் கொண்டிருக்கின்றேன் என அறிக. எ.று.
அறங்குலவு தோழி - அற வுணர்வும் ஒழுக்கமும் உடைய தோழியே. அறிவனவற்றை அறிந்து உண்மை யுணர்ந்து உரைப்பவர் வார்த்தைகளே வேண்டுவனவாதலால், “அறியாதவருடைய வார்த்தைகளால் பயனில்லை” என்பாளாய், “நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை” என்று கூறுகின்றாள். இறத்தலுறுவது - சாதல். பெறுவது - பெறத்தக்க செல்வங்கள். உழலுதல் - வருந்துதல். உயிரோடு இருந்தே உறங்குவதும் விழிப்பம் ஒருவகை இறப்பு பிறப்பென்று சொல்லுவராதலால், “உறங்குவதும் விழிப்பதும்” என உரைக்கின்றாள். இரக்கமில்லாத இயல்பு பற்றி, “மறங்குலவும் அணுக்கள்” என்று மொழிகின்றாள். உயிரை அணுமயம் என்பராதலால், “அணுக்கள்” என்று உரைக்கின்றாள். மக்களுயிரில் விரத ஞான ஒழுக்கங்களால் சிறந்தவர்கள் மதத் தலைவர்களாக விளங்குவதால், “செய்த விரதத்தால் மதத் தலைமை பதத் தலைமை வாய்த்தனர்” என்று பகர்கின்றாள். பெரிய மடங்களுக்கு ஆதினகர்த்தர், பண்டார சந்நிதிகள் என்பன போன்ற உயர்நிலை பெற்றவர்களை, “பதத் தலைவர்” என்று குறிக்கின்றார். இரங்கல் எதுகை நோக்கி இறங்கல் என வந்தது. (6)
|