5696.

     சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
          தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
     தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
          தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
     இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
          இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
     நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
          நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே

உரை:

     இனிய சொற்களைப் பேசும் தோழி! எல்லாம் சிவமயமே என்று நீயே பலகாலும் சொல்லக் கேட்டுளேன்; தவச் செல்வர்களாகிய பலர் சமயத் தலைவர் என்றும் மதத் தலைவர் என்றும் தத்துவ ஞானிகள் என்றும் தத்துவத் தலைவர் என்றும் அவரவர் தலைவர்களாய்ப் பிரித்து அவர்களோடு சொல்லாடுவது என்னையோ வென்று உரைத்து இதனால் விளையும் பயன் யாது என்று சொல்லுகின்றாய்; புதுமையாக உள்ள இப்பிரிவுகளை நீ அறியாயாதலால் நீ இவ்வாறு கூறுகின்றாய்; உன்னுடைய ஐயம் நீங்கும்படியாக நான் சொல்வேன் கேட்பாயாக. எ.று.

     எல்லாம் சிவமயம் எனத் தோழி பலகாலும் சொல்லக் கேட்டுள்ளாள் என்பதற்கு, “பற்பல கால் செப்பியிடக் கேட்டேன்” என்று தலைவி மகிழ்ந்துரைக்கின்றாள். தேமொழி - இனிய சொற்களைப் பேசுகின்றவள். தோழிபால் உள்ள அன்பு மிகுதியால் தேமொழியாய் எனத் தலைவி உரைக்கின்றாள். பெரிய தவஞ் செய்த நன்மக்களைத் “தவமயத்தார்” என்று சிறப்பிகின்றாள். எல்லாம் சிவமாயிருக்கச் சிலரை சமயத் தலைவர் என்றும் அவர் தலைவர் இவர் தலைவர் என்றும் பிரித்துப் பேசுவது என்னையோ என்றும் என்ன பயன் என்றும் கேள்வி எழுதலால் தலைவி தோழிக்கு உரைக்கின்றாள். நவம் - புதுமை. அப்பலரிடையே நுணுக்கமாயிருக்கும் தன்மையை உணர்ந்தறிதல் வேண்டும்; நீ அதனை அறிந்திலை என்பாளாய், “நவமயம் நீ உணர்ந்தறியாய் ஆதலில் இவ்வண்ணம் நவின்றனை“ என்று கூறுகின்றாள்.

     (7)