5697.

     ஒளிஒன்றே அண்டபகிர் அண்டம்எலாம் விளங்கி
          ஓங்குகின்ற தன்றிஅண்ட பகிர்அண்டங்களிலும்
     வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
          விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
     உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை
          உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி
     தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும்
          தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே.

உரை:

     ஒப்பற்ற ஒளி ஒன்றே அண்டங்கள் பகிரண்டங்கள் எல்லாவற்றிலும் பரந்து விளங்கி ஓங்கி நிற்கின்றதேயன்றி அந்த அண்ட பகிரண்டங்களிலும் அவற்றின் வெளியில் இருக்கின்ற சராசரங்களிலும் அவற்றின் அகத்தும் புறத்தும் அவற்றிடையே சொல்லப்படுகின்ற அகப்புறத்திலும் புறப்புறத்திலும் நிறைந்து நின்ற இடங்களில் கிடக்கின்ற இருளைப்போக்கி விளக்கம் செய்கின்ற தன்மையை அறிவுடைய நன்மக்கள் நன்கு அறிவார்கள்; அதனால் அது நீ அறியாததன்று; என் தோழியே! யாவும் ஞானக் கோயிலில் விளங்குகின்ற ஒளிமயமே அன்றி வேறில்லை; இவ்வுண்மையையே எல்லாம் ஞான ஒளியின் மயமே என்று வேதங்களும் ஆகமங்களும் உரைப்பவாதலால் அவை யாவும் மெய்ம்மையேயாகும். எ.று.

     ஒளி - ஞானப் பேரொளி. பகிரண்டம் - காணப்பம் அண்டங்களுக்கெல்லாம் மேலுள்ள அண்ட அடுக்குகள் என அறிக. எல்லா அண்டங்களிலும் பகிரண்டங்களிலும் உயர்ந்தோங்கி விளக்கம் செய்வது ஒன்றாகிய சிவஞானப் பேரொளி; இதனைப் பிரமப் பிரகாசம் என்றும் கூறுவர். அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றினும் சராசரங்கள் வாழ்கின்றன என்பது கருத்தாதலால் “அண்ட வெளி நின்ற சராசரம்” என்று கூறுகின்றாள். சரம் - இயங்குகின்ற பொருள். அசரம் - இயங்காமல் நிலையாய் நிற்கின்ற பொருள்கள். இவை அனைத்தையும் அகம் என்றும் புறம் என்றும் அகப்புறம் என்றும் புறப்புறம் என்றும் பாகுபடுத்தி ஆராய்வது அறிஞர் மரபாதலின், “விளம்பும் அகப் புறத்தினொடு புறப்புறத்தும்” என்று புகல்கின்றாள். இவற்றின் இடையிடையே இருள் தங்குவதால் அதனை ஆங்காங்கு இடையீடின்றிப் பரந்து நின்று போக்குவது ஒளி விளங்கும் சிவஞானப் பேரொளியின் அருட் செயல் என்று ஞானவான்கள் உரைத்தலால், “நிறைந்து உளி நின்ற இருள் நீக்க இலங்குகின்ற தன்மை உலகறியும்” என்றும், நீயும் ஞானப் பெண்ணாதலால் நன்கறிவாய் என்பாளாய், “நீ அறியாததன்று கண்டாய் தோழி” என்றும் மொழிகின்றாள். உளி - இடம். தளி - ஞானக்கோயில். ஞானமாகிய கோயிலில் வைத்துணரப்படுவதாகலின் ஞானப் பேரொளியை, “தளி நின்ற ஒளி மயமே” என்று விளம்புகின்றாள். இவ்வுண்மை எல்லா வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உடன்பாடாம் என்பாளாய், “வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே” என உரைக்கின்றாள்.

     (8)