5698.

     ஏற்றிடுவே தாகமங்கள் ஒளிமயமே எல்லாம்
          என்றமொழி தனைநினைத்தே இரவில்இருட் டறையில்
     சாற்றிடுமண் பாத்திரத்தை மரவட்டில் களைக்கல்
          சட்டிகளை வேறுபல சார்ந்தகரு விகளைத்
     தேற்றமிகு தண்ணீரைச் சீவர்கள்பற் பலரைச்
          செப்பியஅவ் விருட்டறையில் தனித்தனிசேர்த் தாலும்
     ஊற்றம்உறும் இருள்நீங்கி ஒளிகாண்ப துளதோ
          உளதேல்நீ உரைத்தமொழி உளதாகும் தோழி.

உரை:

     தோழி! உயர்வாகப் பேசப்படுகின்ற வேதங்களும் ஆகமங்களும் எல்லாம் ஞானப் பேரொளி மயமே என்று உரைக்கின்ற சொற்களை நினைவிற் கொண்டு இராக்காலத்தில் இருள் நிறைந்த இருட்டறையில் மண் பாத்திரங்களையும் மர வட்டில்களையும் கல் சட்டிகளையும் வேறு கையாளுதற்கு அமைந்த கருவிகளையும் தெளிவு மிக்க தண்ணீரையும் சீவர் பலரையும் உள்ளே வைத்து மேலே சொல்லிய பொருட்களை அந்த இருட்டறையில் தனித்தனியாகப் பழுத்து வைக்கச் சொன்னாலும் சொல்லியவாறு வைத்தாலும் மிக்கு இருக்கின்ற இருள் நீங்கி ஒளி எய்தக் காணப்படுமாயின் நீ உரைக்கின்ற கருத்து உண்மையாம். எ.று.

     உயர்ந்த நூல்களாக அறிவுடையோரால் ஓதப்படுதலால், “சாற்றிடு வேதாகமங்கள்” என்று சிறப்பிக்கின்றாள். வேறு வேறு வகைப்பட்ட பொருட்கள் என்பதற்கு மண் பாத்திரங்களையும் மர வட்டில்களையும் கற் சட்டிகளையும் பிற கருவிகளையும் எடுத்துரைக்கின்றாள். ஒளி உடையவையாதலின், “தேற்றமிகு தண்ணீர்” என்றும், “சீவர்கள் பற்பலர்” என்றும் செப்புகின்றாள். இருட்டறையில் பகுத்துணர்வு பண்புடன் விளங்கினும் பகுப்புச் செயலால் ஒளி எய்திடாது என்பதை விளக்குவதற்கு, “தனித்தனிச் சேர்த்தாலும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ” என்று உரைக்கின்றாள். பகுத்துணர்வு எத்துணை மிக்கிருப்பினும் சிவஞானப் பேரொளி எய்தினாலன்றி அஞ்ஞான இருள் நீங்கிடாது என்பது இதனால் விளக்கமுறும் கருத்தாகும்.

     (9)