5699. பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்
உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்
உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே
தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்
தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.
உரை: பரம் என்பது உலகு என்றும் உயிர்கள் என்றும் கற்பித்துக் கொண்டவை எல்லாம் பெரியோர்களால் சொல்லப்படுகின்ற சிவமே என்று உணர்ந்து கொண்டோமதலால் நாமே பிரமம் எனப் பிறர்க்குச் சொல்லி உவகை பொங்கி வழிய ஆங்காங்கு இருந்து பேசுகின்ற பிரம ஞானிகளுடைய பெரிய மதம் பிடித்து வருந்தாதே; தோழி, அறிவுறுத்தால் பெருமையுடைய உலகங்களும் உயிர்களும் மேன்மையுடையன எனப் பேசப்படும் மற்ற பொருட்களும் காரியப்பாட்டால் பொருளாகக் கருதப் பட்டுள்ளனவே ஆயினும் அவை காரண ஆராய்ச்சியில் இல்லாது கழிவனவாம்; ஆதலால் மேன்மை பொருந்திய ஞானப் பேரொளியால் காணுமிடத்து அவை யாவும் சிவமயமே என்று உணர்ந்து கொள்வது சன்மார்க்க நெறியாகும்; இதனை நீ கடைப்பிடிப்பாயாக. எ.று.
பரம் - மேன்மை யுடைய பொருள். சிவமாகிய பிரமம் ஒன்றே எல்லாமாவது; அதனால் யாமும் சிவமே என்று பிரமஞானிகள் பேசுகின்றமை பற்றி அவர்களை, “பிரமம் எனப் பிறர்க்குரைத்துப் பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்” என்று புகல்கின்றாள். பெரியவர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு. நீக்குதற் கரிய மதச் செருக்கு என்பதை, “பெரிய மதம்” என்று குறிக்கின்றாள். காரிய உலகில் உயிர் உலகு பரம்பொருள் எனப் பேசப்படுவன; காரண ஆராய்ச்சியில் காணுமிடத்து அவை வெறும் கற்பனைகளாய்க் கழிவது பற்றி, “காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லன” என்று கழறுகின்றாள். சிவஞானப் பேரொளியாலன்றி உண்மை நிலையைக் காண்பரிது; அதனைக் கண்டுணர்ந்து ஒழுகுவது சன்மார்க்க ஞானிக்கு முறையாம் என வற்புறுத்துவாளாய், “தரம் மிகு பேரருள் ஒளியால் சிவமயமே எல்லாம் தாம் எனவே உணர்ந்து சன்மார்க்க நெறி பிடியே” என்று அறிவுறுத்துகின்றாள். (10)
|