5700.

     பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
          பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
     தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
          சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
     திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
          திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
     சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
          திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.

உரை:

     பிரமம் என்றும் சிவம் என்றும் சான்றோர்கள் பேசுவதன் பொருள் நிலை பெருமை மிக்க நன்னிலையேயாகும். ஆயினும் இந்நிலைகளில் வேறுபாடு உண்டோ என்று சொல்லுக என்று தெளிவடைய என்னைக் கேட்கின்றாய்; தோழி நான் சொல்லுக என்று தெளிவடைய என்னைக் கேட்கின்றாய்; தோழி, நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக; நீ சமரச சன்மார்க்க நிலையை உறுதி மிக அடைவாயானால் எல்லாமாகியும் அல்லதாகியும் திருவருளாகிய ஞானம் உளதாம்; அந்த ஞானவெளியில் விளக்கமுறும் தனிப் பரம்பொருள் சிறப்புடைய பொது உண்மை எனத் தெரியத் தோன்றும்; சிவம் என்றும் பரம்பிரமம் என்றும் முடியாகக் கூறப்படும் சிவம் ஆகமாந்தம் எனவும் பிரமம் என்றும் முடிவாகக் கூறப்படும் சிவம் ஆகமாந்தம் எனவும் பிரமம் வேதாந்தம் எனவும் கூறப்படும் கூறுபாட்டினை அறிந்துகொள்வாயாக. எ.று.

     பெருநிலை - பெருமை நிறைந்த பொருள் எனவாகும். தரம் - உயர்வு தாழ்வு. திறம் - உறுதி. சிவமும் பிரமமும் எல்லாமாகியும் அல்லதாகியும் இருக்கும் நிலை திருவருள் ஞானத்தால் விளங்கும் என்பதற்கு, “எல்லாமாகி அல்லாதாகும் திருவருளாம் வெளி விளங்க விளங்கு தனிப் பொருளாம்” என விளம்புகின்றாள். சிவம் - உண்மை நிலை எனவும், பிரமம் பொது நிலை எனவும் உணர்ந்துகொள்க என்பது கருத்து. இக் கருத்து சமரச சன்மார்க்க நிலையால் இனிது உணரப்படும் என்பாளாய், “சமரச சன்மார்க்க நிலை திரமுறச் சார்தி எனில் அறிவாய்” என்று தலைவி விளக்குகின்றாள். திருவருள் என்றது திருவருட் சிவஞானத்தை.

     (11)