5701.

     இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என்
          றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ
     துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ
          சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ
     விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த
          மேனிலைஎன் றந்தமெலாம் விளங்குகின்ற தன்றி
     வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால்
          மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே.

உரை:

     இளம் பெண்ணே! விளங்குகின்ற பொது உண்மை என இருக்கின்ற இயல்புகளைச் சொல்லுக என்று கேட்கின்றாய்; அவை யான் அறிந்துகொள்ளும் நிலையை உடையனவாகுமோ? துலங்குகின்ற அவற்றைச் சொல்லவும் கேட்கவும் இயலாவே; அப்போது உண்மை நிலைகள் யான் சொல்லும் அளவினவோ பொருளாகும் தன்மை எனவோ நுணுகி நோக்கும் அறிவுக் கடங்குவனவோ? ஆகா; குறுக்கிடுகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேன்மையான நிலைகள் என்று வேதாந்தம் முதலிய எல்லா அந்தங்களும் சொல்லுவதன்றி நலம் மிக்க மேன்மை நிலையின் உண்மைத் தன்மை யாது என்று வினவினால் அவைகள் ஒன்று பேசாமலிருப்பதன்றி வாய் திறந்து ஒன்றும் கூறுவதில்லை காண். எ.று.

     முன்னர் பிரமம் என்றும் சிவம் என்றும் விளங்குவன முறையே பொதுவும் உண்மையுமாம் நிலைகள் என்று பேசப்பட்டமையின் அவற்றை இங்கே, “இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை” என்று குறிக்கின்றாள். பிரமத்தின் பொதுத் தன்மையையும் சிவத்தின் சிறப்புத் தன்மையையும் நுண்ணிதின் உணர்ந்து அறிந்து கொள்ளவோ வாயால் உரைக்கவோ சான்றோர் சொல்லக் கேட்கவோ போதிய அறிவு தனக்கில்லை என்பாளாய், “யான் அறியும் தரமோ துலங்கும் அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ” என்று தலைவி கூறுகின்றாள். அவை இரண்டும் அறிவுக்கும் வாக்குக்கும் பொருளுணர்வுக்கும் எட்டாதவை என்பதுபற்றிச் “சொல்லளவோ பொருளளவோ அறிவளவோ” என இயம்புகின்றாள். அப்பரம் பொருள் தத்துவாதீதம் என்று வேதாந்தம் முதலிய நூல்கள் விளம்புகின்றன என்பாளாய், “தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேனிலை என்று அந்தமெலாம் விளம்புகின்றது” என்று சொல்லுகின்றாள். பொதுவியல்பைத் தடத்தம் என்றும், உண்மை இயல்பைச் சொரூபம் என்றும் கூறுவர். சொரூப விலக்கணம் அறிந்தாலன்றித் தடத்தத்தின் தனி இயல்பை உரைக்கலாகாது என்பது பற்றி, “அம்மேனிலையின்றி உண்மை எது என்றால் மௌனம் சாதிப்பதன்றி வாய் திறப்பத்தில்லையே” என்று உரைக்கின்றாள். வேதாந்தம், சித்தாந்தம், யோகாந்தம், கலாந்தம், நாதாந்தம், போதாந்தம் என்ற ஆறு அந்தங்களாம். ஆறினையும் உணர்ந்த அறிஞர்களை “அந்தம்” என்று குறிப்பாய் எடுத்துரைக்கின்றாள். பரம்பொருளின் சொரூப இலக்கணங்களை உரைக்க மாட்டாமல் இருக்கின்ற தன்மையை விளக்குதற்கு, “மௌனம் சாதிப்பதன்றி வாய் திறப்பது இலையே” எனச் சுருங்க உரைக்கின்றாள்.

     (12)