5703.

     கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
          கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
     விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
          மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
     அளக்கின்ற கருவிஎலாம் அளவுகண்டார் இலையே
          அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
     துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
          சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.

உரை:

     சொல்லப்படுகின்ற வேதப் பிரமாணம் ஆகமப் பிராமணம் ஆகிய இரண்டும் பொருள்களின் மெய்ம்மை காண்பதற்குத் துணையானவாம்; அவற்றின் பிரமாணமாகும் தன்மையை அறிந்து கொள்ளற்குரிய பிரமாணங்களைக் கொண்டு சான்றோர் நெடுங்காலம் ஆராய்ந்தறிய முயன்று வீழ்ந்து ஒழிந்தனர்; அவ்விடத்தே அவர்கள் அறிதற்குக் கருவியாய் நின்றவை யனைத்தும் தேய்ந்து வீழ்ந்தொழிவதைக் கண்டார்களே அன்றி ஒரு வகையிலும் அளவை முடிபு கண்டார்களில்லை; அதனாற்றான் எனது அறிவின் சிறுமை தேர்ந்து ஒருவாறு என்று சொன்னேன்; மேற்சொல்லிய வெளிகள் வரையிலும் நம்மால் துணிந்துரைக்க முடியவில்லை என அறிக. எ.று.

     வேதப் பிரமாணம் ஆகமப் பிரமாணம் இவற்றைத் துணைகொண்டு ஆராயும் ஆன்ம ஞானமாகிய சுயஞானப் பிரமாணம் இவை மூன்றும் பரம்பொருளின் தடத்தம், சொரூபம் ஆகியவற்றை உள்ளவாறு உணரமாட்டாது ஒழிந்தமை உரைத்தவாறாம். மௌன சத்தி வெளி ஏழையும் அளந்துரைக்குமிடத்து அவை யாவும் பெருவெளியில் அடங்கும் என உரைக்கும்போது “அளப்பது ஒருவாறு” என்று முன்பாட்டில் குறித்ததை இங்கே “சிற்றறிவால் ஒருவாறு என்றுரைத்தேன்” என்று ஓதுகின்றாள்.

     (14)