5706. முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்
மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்
பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்
துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை
சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
உரை: மாதே! காலைப் பொழுதில் நீராடுதற்கு முன்பே என் கணவராகிய சிவபெருமான் என்பால் வருகுவர்; இது பொய்யில்லை; பொய் என்று சொல்லுகின்றவர் சொல்லுக; பின்பு உண்மையாவது விளங்கும்; அதில் குற்றமில்லை; நான் சொல்லுவதிலும் தவறில்லை; இவ்வுலகில் துன்ப உரைகளைப் பேசும் சிற்றினத்தவர்களின் சிறு மொழிகளைக் கேட்டு மனம் கலக்கமுறாதே; நமது மாளிகையைச் சுற்றிலும் நன்கு அலங்காரம் செய்க; தனக்கு உரியதாகிய திருச்சிற்றம்பலத்தில் நடம் புரிகின்ற இறைவனாகிய சிவனுடைய ஆணை மொழியாதலால் நான் சொல்லும் இது முக்காலும் சத்தியம் என உணர்க; எ.று.
காலையில் நீராடுதல் பொழுதுக்கு முன்பே தலைவர் வந்தருளுவர் என்பாளாய், “என் கணவர் முன்பு ஆட்டுக் காலையிலே வருகுவர்” என்றும், இது பொய்யாகாது என வற்புறுத்தற்கு, “மோசமிலை மோசம்” என்றும் மொழிகின்றாள். மொழிக என்றும் தலைவி தோழிக்கு உரைக்கின்றாள். பின்பாட்டுக் காலை- பிற்காலம். பிசகு - பொய்யாதல். துன்பத்துக்கு ஏதுவானவற்றைச் சொல்லியும் செய்தும் ஒழுகும் கீழ்மக்களை, “துன்பாட்டுச் சிற்றினத்தார்” என்று சொல்லுகின்றாள். உள்ளம் துளங்கல் - மனம் வருந்துதல். (3)
|