5707.

     உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
          உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
     கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
          கணவர்திரு வரவிந்தக் காலையில் ஆம் கண்டாய்
     நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
          நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
     தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
          சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

உரை:

     மாதே! உள்ளத்தில் பொருந்திய உண்மைகள் யாவற்றையும் நான் நன்கு அறிவேன்; என்னுடைய பெருந்தகையாகிய சிவபெருமானும் இனிது அறிவர்; ஆகவே உலகியல் மாயையால் மயங்கியுள்ள சிற்றறிவை யுடைய மக்கள் எதனை அறிவார்கள்; என்னுடைய கணவராகிய சிவனுடைய நல்வரவு இன்று காலையில் நிகழும்; ஆதலால் நடுவிடங் கொண்ட நமது மாளிகையை மங்கலப் பொருள்கள் யாவையும் கொண்டு நன்கு அழகமைய அலங்கரிப்பாயாக; நான் சொல்லிய இதனைப் புறக்கணித்து விட்டுத் தலைவர் வருவரோ எனச் சந்தேகம் கொள்ளாதே; நான் சொல்வது நடராசப் பெருமானுடைய ஆணையாதலால் முக்காலும் சத்தியம் என உணர்க. எ.று.

     உள்ளத்தில் எழுகின்ற உண்மை யுணர்வுகளை, “உள்ளுண்ட உண்மை” எனத் தலைவி உரைக்கின்றாள். தன்னை ஆளாகக் கொண்ட பெருமானாதலால், “என்னை யுடைய பெருந்தகை” என இயம்புகின்றாள். உலகியல் மாயையில் கிடந்து உண்மையறிவு மயங்கிக் கிடக்கின்ற மக்களை, “மாயைக் கள்ளுண்ட சிற்றனத்தார்” என்று இகழ்கின்றாள். உலகியல் மக்களைப் போல இருள் நிறைந்த இரவுப் பொழுதில் வாரார் எனத் தெளிவித்தற்கு, “எனது கணவர் திருவரவு இந்தக் காலையில் ஆம் கண்டாய்” எனக் கட்டுரைக்கின்றாள். விரிந்து பரந்த நடுவிடத்தைக் கொண்ட மாளிகை, “நள்ளுண்ட மாளிகை” எனப்படுகின்றது. தள்ளிவிட்டு வீணே சந்தேகம் கொள்ளாதே என்பாளாய், “தள்ளுண்டு இங்கு ஐயமுறேல்” என்று தலைவி தோழி அறிய உரைக்கின்றாள்.

     (4)