5708. என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
உரை: மாதே! என்னுடைய ஒப்பற்ற கணவராகிய சிவனது திருவருள் ஞான இன்ப உண்மையை யான் நன்கு அறிவேன்; உலகியல் மக்கள் எவ்வாறு அறிவார்கள்; நினைப்பின்றி உண்பன உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் அறிவார்களே தவிர பிறிதொன்றும் அறியார்; அவர்கள் உரத்த குரலில் உரைப்பன கேட்டு நீ சந்தேகம் கொள்ளுதல் ஒழிக; உயர்ந்த நமது மாளிகையைப் பொருந்துகின்ற மங்கலப் பொருள்கள் விளங்க அலங்கரிப்பாயாக; நீ இங்கே இருந்து வீணே உறங்குவதால் ஒரு பயனுமில்லை; மனம் சோர்வடையாதே; அம்பலத்தில் தனக்குரிய ஞான நடனத்தைச் செய்கின்ற நடராசப் பெருமானாகிய தலைவருடைய சிறந்த ஆணை மொழியாதலால் இது முக்காலும் சத்தியம் என உணர்க. எ.று.
அருட்சோதி - திருவருள் ஞானத்தால் உளதாகும் தூய பேரொளி, அது இன்ப மயமாயிருத்தல் விளங்க அதனை, “அருட் சோதி உண்மை” என்று எடுத்து மொழிகின்றாள். திருவருள் ஞானப் பயனை உணர்ந்தவர்களன்றி மற்றவர்கள் யாரும் அறியாராதலால், “யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டறிவார்” என்று உரைக்கின்றாள். உன்னல் - நினைத்தல். உலம்புதல் - உரத்தக் குரலில் பலரும் அறிய பேசுதல். துன்னுதல் - பொருந்துதல். தூங்குதலால் என்ன பலன் என்று தலைவி கடுமையாகக் கூறுவது கேட்ட தோழி மனம் வருந்தக் கூடாது என்பதற்காக, “சோர்வடையேல்” என்று சொல்லுகின்றாள். ஞானமூர்த்தியாகிய நடராசப் பெருமான் சபையில் ஆடுவது ஞான நடமாதலால் அதனைத் “தன்னுடைய நடம் புரியும் தலைவர்” என்று சாற்றுகின்றாள். (5)
|